தினமலர் 16.08.2012
ஆத்தூர் நீர்தேக்கத்தில் தூர்வாரும் பணிமுட்புதர்கள் அகற்ற நகராட்சி நடவடிக்கை
திண்டுக்கல்:ஆத்தூர் நீர் தேக்கத்தின் அருகில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு தூர் வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் ஆத்தூர் நீர்தேக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. 24 அடி உயரமுள்ள நீர் தேக்கத்தில் 22 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். நீண்டகாலமாக இந்த நீர்தேக்கத்தில் தூர் வாரப்படாததால் நீர்மட்டம் குறைந்ததோடு, சகதி, வண்டல் மண் படிந்து காணப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் முட்புதர்கள் ஆக்கிரமித்திருந்தன.திண்டுக்கல் நகராட்சி சார்பில் மராமத்து பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அதேப்போன்று தூர் வாரும் பணியும் துவக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத முட் புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.நகராட்சி தலைவர் மருதராஜ் கூறுகையில்,”ஆத்தூர் நீர் தேக்க பகுதியில் 30 ஆண்டுகளாக மராமத்து பணிகள் நடைபெறவில்லை. கொள்ளளவு வெகுவாக குறைந்ததோடு, பார்வையாளர்கள் செல்ல முடியாத அள விற்கு முட்புதர்கள் குவிந்திருந்தன. முட்புதர்கள் அகற்றப்பட்டு நீர்தேக்கத்தை முழுமையாக பார்க்கும் வகையில் அப்பகுதி மாற்றப்பட்டுள்ளது,” என்றார்.