தினகரன் 05.10.2010
ஆரணி தொகுதிக்கு காவிரி நீர் திட்டம்
ஆரணி, அக்.5: ஆரணி நகராட்சியில் 3355 பயனாளிகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் விழா நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதையடுத்து ஆரணி ஒன்றியம் அக்ராபாளையத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் பல்வேறு கிராமங்க ளில் புதியதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நூலகக் கட்டிட திறப்பு விழா நடந்தது.
பின்னர் மேற்கு ஆரணி ஒன்றிய கிராமங்களில் அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலை கடை, சம்புவராயநல்லூர், தச்சூர் ஊராட்சி மன்ற கட்டிடம், தேவிகாபுரத்தில் கூடுதல் துணை சுகாதார நிலைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. விழாக்களுக்கு கலெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு ரூ10 கோடிக்குமேல் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
ஆரணி தொகுதியில் அதிகப்படியான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரணியில் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்நகராட்சி பகுதியில் கடந்த நாலரை ஆண்டுகளில் ரூ13.15 கோடியில் 568 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் இருந்து ஆற்காட்டிற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிக்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பாலாற்று பைப் லைன் மூலம் காவிரி நீர் ஆரணி தொகுதிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். இதற்கான பணிகள் துவங்க இன்னும் பல மாதங்களாகும்.6 மாத காலத்திற்குள்ளாக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரலாம். புதிய ஆட்சி மூலம் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைத்து மீண்டும் கருணாநிதி ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்பி கிருஷ்ணசாமி, எம்எல்ஏ சிவானந்தம், முன்னாள் பால்வளத் தலைவர் ஏ. செல்வரசு, ஒன்றியக்குழு தலைவர்கள் வக்கீல் க. சங்கர், தாட்சாயிணி அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, மாவட்ட திமுக பொருளாளர் கே.ஆர். சீதாபதி, நகராட்சி சாந்திலோகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பெ.கிரி, மாவட்ட கவுன்சிலர் பழனி, செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி, தாசில்தார் கச்சப்பாளையம், ஒன்றிய ஆணையாளர்கள் இந்திரா, பாண்டுரங்கன், அ.கிருஷ்ணமூர்த்தி, கே. பாலகிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள். ஜி.வெங்கடேசன், வெள்ளை கணேசன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.