தினமலர் 10.02.2010
ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறப்பு
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி அரசு மருத்துவமனைகள், தலைவாசல், கூடமலை, காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 4.92 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ கட்டிடத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண்த்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகம் முழுவதும் தாலுக்கா மருத்துவமனைகள் தரம் உயர்த்தி 1,000 கோடி ரூபாய் அளவுக்கு புதிதாக கட்டிட பணிகள் நடந்து வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகளில் 636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ கருவிகள் வழங்கி தரமான சிகிச்சையளிக்கப்படுகிறது. கடந்த 2006-07ல் அரசு மருத்துவமனைகளில் 5,323 பிரசவமும், 2009-10ல் 16,086 பிரசவங்களும் என 9 சதவீதத்திலிருந்து 34 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 2006ல் 30,069 பிரசவமும், 2009-10ல் 17,905 என 53 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக குறைந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மருத்துவர் காலியிடம் இருந்தது. மூன்றாண்டு காலத்தில் 6,118 புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கோரிக்கை வைத்து “மிரட்டக்‘கூடியவர். அவர் மிரட்டும்போது, “நாங்கள் செய்ய முடியாது‘ என கூறமுடியாது. தற்போது கெங்கவல்லி மருத்துவமனை குடியிருப்பு பகுதி சீரமைக்கும்படி கோரிக்கை அளித்துள்ளார். சிதம்பரம் நகராட்சி போன்று இருந்த சேலம் மாநகராட்சி, இன்று ஆறு வழிச்சாலை என பல்வேறு திட்டங்களால் சென்னை தலைநகர் போல் சேலம் மாறி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் 15.61 கோடி ரூபாயில் நலத்திட்ட பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு 1,100 ரூபாயும், கரும்பு 9.5 பிழிதிறனுக்கு டன் 1,550 ரூபாயும் வழங்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் டன் 749 ரூபாய் தான் இருந்தது. ஆத்தூர் அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவ மனைக்கு நிகரானது தான், திட்டம் கைவிடப்படவில்லை. சேலம் மாநகரில் ஆங்கிலேயே ஆட்சியில் ரத்தனசாமி பிள்ளை சேர்மனாக இருந்தபோது குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அப்போது 2 லட்சம் மக்கள் தொகையாக இருந்தது, தற்போது 10 லட்சம் பேர் உள்ளனர். குடிநீர் போதாத காரணத்தால் ஆத்தூர் நகருக்கு செல்லும் குடிநீரில் சேலம் மாநகர மக்களுக்கு சிறிதளவு எடுக்கிறோம். மேட்டூர் – ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் தலைவாசல், கெங்கவல்லி வரை 295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படுகிறது. அத்திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்சனை தீரும். அமைச்சர் பன்னீர்செல்வம் பகுதிக்கு வீராணம் வரை மேட்டூர் குடிநீர் தான் வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.