தினமணி 05.08.2010
ஆலங்குளம் பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு கட்டண விவகாரம்: பொதுமக்கள் குழப்பம்ஆலங்குளம்,ஆக. 4: புதிய குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை,ஆலங்குளம் பேரூராட்சி உயர்த்தியிருப்பதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ1100 வசூலிக்கப்பட்டது. அதன்பின் 2002-ல் தட்கல் முறையில் ஒரே ஒருவருக்கு மட்டுமே புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.அதன் பின் சுமார் 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதிய இணைப்புகள் வழங்கப்படவில்லை.
ஆலங்குளம் பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 6475 வீடுகள் உள்ளன. 1438 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன.2002}ல் அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் தட்கல் முறையில் ரூ.8100 க்கு 800 வீட்டு இணைப்புகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் தேர்தல் நெருங்கி வருகிறது என காரணம் கூறி அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது ஆலங்குளத்தில் 3 லட்சம் மற்றும் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி டிசம்பர் மாதம் நிறைவடையும் என தெரிகிறது.
இந்த இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளும் செயல்பட ஆரம்பித்தால், ஆலங்குளம் பேரூராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 8.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கலாம். எனவே, தற்போது புதிதாக 5 ஆயிரம் இணைப்புகள் வரை வழங்கலாம். இந்த சூழ்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட குடிநீர்த் திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.
இதற்காக ரூ.57 லட்சத்து 60 ஆயிரம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இத் தொகையை குடிநீர் இணைப்பு வேண்டுவோரிடம் வசூல் செய்ய, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது.
ஆனால் தீர்மானத்தில் பொதுமக்களிடம் வசூலிக்க உள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் இல்லை. இதனால் அன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.தங்கசெல்வம், சுயேட்சை உறுப்பினர்கள் வி.ஏ.மோகன்ராஜ், எஸ்.பி.ராஜதுரை, டி.ராமரத்தினம் ஆகியோர் பொதுமக்களிடம் எவ்வளவு தொகை வசூலிக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வி எழுந்த பின்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நான்கு உறுப்பினர்களும் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
இது குறித்து பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் கே.எஸ்.தங்கசெல்வம் கூறியதாவது:
தற்போது 2500 இணைப்புகளாவது வழங்கப்படும். இதற்கு தலா ரூ.8100 வசூலித்தால் ரூ.2 கோடிக்கு மேல் வசூலாகும்.அரசுக்கு கட்டவேண்டியது ரூ.57 லட்சம்தான். மீதி ரூ.1.4 கோடி பொதுநிதியில் சேர்ந்துவிடும். இந்த பணத்தில் சாலை அமைக்கிறோம், கட்டடம் கட்டுகிறோம் என கூறி லாபம் பார்க்க இப்போதே சிலர் தயாராகி விட்டனர். எனவே, ரூ. 2 ஆயிரம் வசூலித்தாலே அரசுக்கு செலுத்த வேண்டிய பணம் கிடைத்துவிடும். நாங்கள் ரூ. 4 ஆயிரம் வாங்குங்கள் என்றுதான் போராடுகிறோம் என்றார் அவர்.
இது குறித்து சமூக நல ஆர்வலர் மேஜர்ரவிக்குமார் கூறியதாவது:
இந்த தட்கல் முறை என்பதே ஆலங்குளம் பொதுமக்களை ஏமாற்ற அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் கொண்டு வந்ததுதான். 800 வீட்டு இணைப்புக்கு அனுமதி வாங்கி,ஒரே ஒரு நபருக்கு மட்டும் அப்போது இணைப்பு வழங்கினார்கள்.
மீதி 799 இணைப்புகள் வழங்க நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரூ.8100 செலுத்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் கிடையாது. நிர்வாகம் நினைத்தால் குறைக்கலாம். ஆனால் ரூ.8100 செலுத்தினால்தான் இணைப்பு வழங்கப்படும் என வீடுவீடாகச் சென்று சிலர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
மீண்டும் ஏமாறுவதற்கு ஆலங்குளம் மக்கள் தயாராக இல்லை. உடனடியாக கட்டணத்தைக் குறைத்து புதிய குடிநீர் இணைப்பை வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம் கூறுகையில், இந்த பிரச்னை குறித்து அரசு அதிகாரிகளிடமும், வழக்கறிஞரிடமும் ஆலோசனை கேட்கப்படும். புதிய குடிநீர் இணைப்பிற்கான கட்டணக் குறைப்பு குறித்து தீர்மானிக்க, பேரூராட்சியின் அவசரக் கூட்டம் ஜூலை 6}ம் தேதி நடைபெற உள்ளது என்றார் அவர்.
பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் மட்டும் போட்டு கொடுத்தாலே,அமைச்சர் பூங்கோதை, எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பியின் முயற்சியில் குடிநீர் கட்டணக் குறைப்பை கண்டிப்பாக கொண்டு வர முடியும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
வீட்டு குடிநீர் இணைப்புகள் எப்போது கிடைக்கும் என ஆலங்குளம் மக்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் வேளையில்,கட்டணக் குறைப்பு செய்து இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.