ஆலயங்களில் அன்னதானம், பள்ளிகளில் சத்துணவு, விலையில்லா அரிசி சரித்திரம் படைக்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேயர் சைதை துரைசாமி பாராட்டு
ஆலயங்களில் அன்னதானம், பள்ளிகளில் சத்துணவு, விலையில்லா அரிசி போன்ற மக்கள் நலத்திட்டங்களை வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா சரித்திரம் படைத்து வருவதாக சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பாராட்டு தீர்மானம் நிறைவேற்றினார்.
பார்வியக்கும் சரித்திரம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சென்னை மாநகராட்சியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் சைதை துரைசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூறியிருப்பதாவது:–
ஆலயங்களில் அன்னதானம், பள்ளிகளில் சத்துணவு, வீடுகள் தோறும் விலையில்லா அரிசி என அன்னமிட்டு மகிழ்ந்து, தாம் ஆளும் தமிழகத்தில் பசிப்பிணி அறவே இல்லையெனும் பார்வியக்கும் சரித்திரத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா படைத்து வருகிறார்.
அன்ன லட்சுமியாக…
உணவு பாதுகாப்பை மக்களுக்கு மேலும் உறுதி செய்திட 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை அமுதம் அங்காடிகள் வாயிலாக விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து இருப்பதற்கும், ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தலைநகர் சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது பொற்கரங்களால் தொடங்கி வைத்த அம்மா உணவகங்களை தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகள் அனைத்திலும் தொடங்குவதற்கு ஆணையிட்டும், அங்கே கூடுதலாக பொங்கல், எலும்பிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவையை 5 ரூபாய்க்கும், 2 சப்பாத்திகள்– பருப்பு கடைசல் அல்லது குருமாவுடன் 3 ரூபாய்க்கும் வழங்கிட உத்தரவிட்டதன் மூலம் அன்பின் வடிவமாக, அன்ன லட்சுமியாக, வாழும் வள்ளலாராக திகழும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாநகராட்சி மாமன்றம் போற்றி வணங்குகிறது.
மதிநுட்பம்
பெருகி வரும் மக்கள் தொகை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் அணிவகுப்பு மற்றும் தொழில்மயம் ஆக்கல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர மக்கள் வாகன நெரிசல்களால் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடியோடு குறைக்கும் நோக்கோடு, தென் மாவட்ட மக்கள் வந்து செல்வதற்கான புறநகர் பேருந்து நிலையத்தை வண்டலூரில் நிறுவிட உத்தரவிட்டு இருக்கும் மதி நுட்பம் கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த மாமன்றம் நெஞ்சார்ந்த நன்றியையும், நிறைவுள்ளத்திலான பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
உலக தமிழினத்தின் பாதுகாவலர்
பான்பராக், குட்கா மசாலா போன்ற போதைப்பொருட்களை தமிழகத்தில் விற்பதற்கு தடை ஆணையிட்டு தமிழக மக்களின் சுகாதாரத்திற்கும், அசுத்தமற்ற சுற்றுச்சூழலுக்கும் வித்திட்டு இருப்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாநகராட்சி மாமன்றம் மனதார வணங்கி உளமார நன்றி சொல்கிறது.
தாய் பிள்ளைக்கு பெயர் சூட்டுவது எனும் வரலாற்று வாடிக்கைக்கு மாறாக, பின்னர் தாய்க்கு பெயர் சூட்டிய பெருமையை அண்ணா படைத்திட்டதுபோல, தமிழ்ச்சங்கம் அமைத்து, தமிழ் வளர்த்த மாமதுரையில், ரூ.100 கோடியில், தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்க ஆணையிட்டிருக்கும், தமிழ்த்தாயின் தலைமகளாம், உலக தமிழினத்தின் பாதுகாவலராம், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் தலை வணக்கம் செய்து, உளமாற நன்றி சொல்கிறது.
பாசம், பரிவுடைய முதல்–அமைச்சர்
‘‘குருவிக்கும் கூடு உண்டு, உனக்கு ஒரு வீடு உண்டா’’ எனும் ஏக்கம் கொண்ட ஏழை–எளிய மக்களுக்கும், நான் தருகிறேன் வீடு என பாசத்தோடு பரிவுடைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாரி வழங்கும் நோக்கோடு படைத்து வரும் பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் நெசவுத் தொழிலாளர்களுக்கு மட்டும் 10 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என பிரத்யேகமாய் அறிவித்து, பிரமிப்பையும், எல்லையில்லா மகிழ்ச்சியையும் உழைக்கும் வர்க்கத்திற்கு உவகையோடு தந்திருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலராம் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் மனதார வணங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘முன்பெல்லாம் சென்னை என்றால் மெரினா கடற்கரை, வள்ளுவர்கோட்டம் என்று சொல்வார்கள். தற்போது வெளியூர்களிலிருந்து சென்னை வரும் மக்கள் அம்மா உணவகம் எங்கிருக்கிறது என்று தான் கேட்கிறார்கள் என்றார். தொடர்ந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை பாராட்டி அவர் பேசினார்.