தினமணி 03.09.2012
கம்பம்,செப். 2: கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, மினி பவர் பம்ப் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ரூ. 34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான தீர்மானம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. கம்பம் நகராட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. டி.சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம். அபுதாகீர், ஆணையாளர் சி. சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:
சக்திகுமார்: நகரமைப்பு பிரிவில் பிளான் அப்ரூவல் பணி தாமதமாக நடைபெறுகிறது.
சுகாதார ஆய்வாளர் ஜெயராமன்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், விவரங்களைச் சரியாக கொடுத்தால் சான்றிதழ் காலதாமதமின்றி வழங்கப்படும்.
கே.வாசு: நகரில் புதிய அபிவிருத்தி குடிநீர் திட்டம் ரூ. 18 கோடியில் செலவு செய்யப்பட உள்ள நிலையில், மேலும், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே.
தலைவர்: கம்பம் நகருக்கு லோயர்கேம்பிலிருந்து புதிய குடிநீர்த் திட்டம் ரூ. 18.80 லட்சத்தில் துவங்கப்பட உள்ளது.
லோயர்கேம்பில் தண்ணீர் வராத காலங்களில், சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் இருந்து, உறைக் கிணறு அமைத்து நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 2.25 லட்சத்தில் திட்டம் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், நகராட்சியின் 33 வார்டுகளிலும் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் 33 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதில் மினி பவர் பம்ப் பொருத்தி தண்ணீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சிப் பொறியாளர் மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.