தினமலர் 05.03.2010
இடம் மாறுது உழவர் சந்தை: நகராட்சி தலைவர் தகவல்
குறிச்சி : குறிச்சி காந்திஜி ரோட்டில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை, விரைவில் மதுக்கரை மார்க்கெட் ரோட்டிற்கு மாற்றம் செய்யப் படுகிறது.
குறிச்சி காந்திஜி ரோட்டில், தி.மு.க., ஆட்சியிலிருந்தபோது உழவர் சந்தை துவக்கப்பட்டது. மதுக்கரை, நாச்சிபாளையம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஒதுக்குப்புறமான பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளதால், பஸ் போக்குவரத்து வசதியின்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பொதுமக்களும் குறைந்தளவே வருகின்றனர். எனவே, உழவர் சந்தையை வேறிடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் வழியில் கஸ்தூரி நகர் பகுதியிலுள்ள “ரிசர்வ் சைட்‘ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சித்தலைவர் பிரபாகரன் கூறியதாவது: மதுக்கரை மார்க்கெட் ரோடு, கஸ்தூரி நகரிலுள்ள “ரிசர்வ் சைட்‘டில், 50 சென்ட் பரப்பில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். மீதமுள்ள 43 சென்ட் இடத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும். நகராட்சிக்குட்பட்ட “ரிசர்வ் சைட்‘களில் காணப்படும் ஆக்ரமிப்புகள் அனைத்தும், அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்தந்த பகுதியில் வசிப்போரின் தேவைக்கு ஏற்ப, விளையாட்டு மைதானம், பூங்கா, நூலகம் போன்றவை அமைக்கப்படும். இவ்வாறு பிரபாகரன் தெரிவித்தார்.