தினமணி 28.06.2010
இணைய தளம் மூலம் பிறப்புச் சான்றிதழ்: போடி நகராட்சி ஏற்பாடு
போடி, ஜூன் 27: இணையதளம் மூலம் பிறப்புச்சான்றிதழ் பெற, போடி நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போடி நகராட்சி எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு நகராட்சி சார்பில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பிறப்பு, இறப்பு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தவும், பல்வேறு திட்டங்கள் போடி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
போடி நகராட்சியில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்தந்த மருத்துவமனைகளுக்குச் சென்று நகராட்சி அலுவலர்கள் விவரங்களைச் சேகரித்து பதிவுசெய்து 24 மணி நேரத்தில் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு, பள்ளியில் சேர்க்கும் நேரங்களில் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு, நகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது.
இந்த இணையதளம் மூலம், போடி நகராட்சியில் பிறப்பைப் பதிவு செய்தவர்கள் இலவசமாக பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி www.eservices.tn.gov.inmunicipality என்ற இணையதளத்தில் சென்று மாவட்டம், நகராட்சியின் பெயர் ஆகியவற்றைத் தேர்வு செய்து, பிறந்த தேதியை உள்ளீடு செய்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் போடி நகராட்சியில் 24.6.1987-ம் தேதி முதல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கு முந்தைய பிறப்பு விவரம் பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும் என்பதால் இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.