தினகரன் 23.09.2010
இணைய தள சேவைக்காக சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது கிடைத்தது
சென்னை, செப்.23: இணையதளம் மூலம் பொதுமக்களின் குறைகள் சிறந்த முறையில் தீர்வு காண்பதற்காக, ‘ஸ்காச் விருது 2010’க்கு சென்னை மாநகராட்சியை அரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காச் நிறுவனம் தேர்வு செய்தது. இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது.
விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி பங்கேற்று சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது 2010ஐ வழங்கினார். இந்த விருதை மேயர் மா.சுப்பிரமணியன், ஆணையாளர் ராஜேஷ் லக்கானி பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
இணையதளம் மூலம் மக்கள் குறைகள் தீர்க்கும் திட்டம் 2008 நவம்பரில் தொடங்கப்பட்டது. இணையதளம் மூலம் சொத்துவரி செலுத்துதல், சொத்து வரி தொடர்பான நினைவூட்டுகள் பெறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், சென்னை பள்ளி மாணவர்கள் வருகையை அறிதல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படு கிறது. இணையதளம் மூலம் சுமார் 30 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு, அதில் 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சிறப்பான இணையதள பணிகளுக்காக ஸ்காச் விருதை வழங்கியுள்ளனர். இவ்வாறு மேயர் கூறினார்.