இந்திய மருத்துவ கழகம் சார்பில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம்
நெல்லை: இந்திய மருத்துவ கழகம் சார்பில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மருத்துவம் குறித்த ஆலோசனைக் கூட்டம் பாளையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு இந்திய மருத்துவக் கழக நெல்லை கிளைத் தலைவர் பிரேமசந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக இந்தியா மாறி வருகிறது. உணவு மாற்றங்கள் மற்றும் உடல் உழைப்பு குறைவு ஆகிய காரணங்களால் சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தகுழாய் பாதிப்பு ஏற்பட்டு இதயநோய் ஏற்படுகிறது. மன அழுத்தம் இன்றி வாழ்வது, வாழ்க்கை முறை மாற்றம், கட்டுப்பாடான உணவு, நல்ல உடற்பயிற்சி ஆகியவை நம்மை சந்தோஷமாக வாழவைக்கும்’’ என்றார்.
கூட்டத்தில் செயலாளர் வெங்கடேஷ்பாபு, மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் ஆகியோர் பேசினர். நரம்பியல் டாக்டர் அழகேசன், எலும்பு முறிவு டாக்டர் ராமகுரு, டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், சுமதி ஆகியோர் கவுன்சிலர்களுக்கு மருத்துவம் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். கவுன்சிலர்களின் சந்தேகங்களுக்கு பதில்கள் தரப்பட்டன. நிகழ்ச்சியில் சுகா தார பணிக்குழு தலைவர் வண்ணை கணேசன், மண்டல தலைவர்கள் தச்சை மாதவன், ராஜன், கவுன்சிலர்கள் விஜயன், பரமசிவன், உமாபதி சிவன், டேனியல் ஆபிரகாம், முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.