தினமலர் 20.05.2010
இனி, நல்லூரில் சுகாதாரம் மேம்படும்! நகராட்சி தலைவி ‘நம்பிக்கை‘
திருப்பூர் : ”நல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார பணிகளை மேம்படுத்த, மேலும் இரு குழுக்கள் உருவாக்க, பணிகள் நடக்கின்றன. ஒரு குழுவில் 15 முதல் 20 பேர் வரை இடம் பெறுவர்,” என்று நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறினார்.நல்லூர் நகராட்சியில் சுகாதார பணிகள் தேக்கமடைந்து வருவதால், வார்டுகளில் கொசு மற்றும் சுகாதாரக்கேடுகள் அதிகரித்து வருகின்றன. ஜெய் நகர், செரங்காடு, நல்லூர் என அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ‘மாஸ் கிளீனிங்‘ என்பது மறந்துபோன செயலாகி விட்டது. சுகாதார பணிகளுக்கு கூடுதலாக ஊழியர்களை நியமிக்க, மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுவரை புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.கொசுத்தொல்லை, வீதிகளில் கழிவு நீர் தேக்கம், துர்நாற்றம், சுகாதாரக்கேட்டால் நோய்கள் பரவுதல் என, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுகாதார பணிகளுக்கு 68 பேரே உள்ளனர். இவர்களால், அனைத்து வார்டுகளையும் உரிய முறையில் தூய்மைப்படுத்த முடிவதில்லை. மேலும், நகராட்சிக்கு 70 பேர் வரை சுகாதார பணிகளுக்கு தேவைப்படுகின்றனர்.தினமும் கொசு மருந்து அடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மெயின் ரோடுகள் மட்டுமின்றி, குறுக்கு சந்துகளிலும் மருந்து தெளித்தல் அவசியம். கொசு மருந்து அடிக்க இரண்டு வாகனங்களை பயன்படுத்தலாம். அதிகமான ஊழியர்களை நியமிக்கும் பட்சத்தில், குடியிருப்புகள் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக பிரித்து பணிகளை செய்ய வேண்டும்.
அரசு தரப்பில் ஊழியர்களை நியமிக்கும் வரை, அதிகமான சுயஉதவி குழுக்களை நியமிக்க வேண்டும். நகராட்சியில் ஒரு ஆய்வாளர் மட்டுமே இருப்பதால், அனைத்து பணியாளர்
களும் முறையாக பணிகளை செய்வதில்லை. மேற்பார்வையாளர்களை அதிகப்படுத்தி பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஏற்கனவே, உள்ள ஊழியர்களை நிரந்தரமாக்கவும் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக, நகராட்சி தலைவி விஜயலட்சுமியிடம் கேட்டபோது, ”நல்லூரில் சுகாதார பணிகளை மேம்படுத்த, மேலும் இரு குழுக்கள் உருவாக்குவதற்கான பணிகள் நடக்கின்றன. ஒரு குழுவில் 15 முதல் 20 பேர் வரை இடம் பெறுவர்,” என்றார்.