தினமலர் 29.06.2010
இன்று மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் ரகசிய சந்திப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி இன்றைய கூட்டத்தில் மேயருக்கு எதிராக எழுப்பும் பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ், தி.மு.க., கவுன்சிலர்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். மேயருக்கு எதிராக சில மாதங்களாக தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். ஜூன் 10ம் தேதி நடந்த ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் “மினிட்‘ புத்தகத்தை பறித்துக் கொண்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக மாநகராட்சி அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்ட அரங்கிலேயே மதிய உணவை சாப்பிட்டனர். இரவு வரை நீடித்த இப்போராட்டம், பின்னர் கைவிடப்பட்டது. பரபரப்பான நிலையில் மாநகராட்சி கூட்டம் மேயர் குமார் முருகேஸ் தலைமையில் இன்று நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் எவ்வித பிரச்னைகள் எழுப்பலாம்? என்பது குறித்து தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பலர் துணை மேயர் பாபு தலைமையில் நேற்று இரவு ரகசிய கூட்டம் நடத்தினர். மாநகராட்சியில் துணை மேயர் அறையிலேயே இக்கூட்டம் நடந்தது. மேயர் கொண்டு வரும் எவ்வித தீர்மானங்களை நிறுத்தி வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்தனர். மேயருக்கு எதிராக தி.மு.க., – காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு குரல் கொடுப்பதால், இன்றைய கூட்டம் மீண்டும் பரபரப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.