இன்று முதல் மதியம் சாப்பாட்டுடன் ஊறுகாய்: அம்மா உணவகங்களில் ஏற்பாடு
மதுரை மாநகராட்சி பகுதியில் செயல்படும் 10 அம்மா உணவகங்களிலும், இன்று முதல் பகலில் தயிர் சாதத்தை தாளித்து வழங்கவும், எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காலையில் ரூ.1க்கு சாம்பாருடன் இட்லியும், மதியம் ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆரப்பாளையம், ஆனையூர், புதூர் ராமவர்மாநகர், காந்திபுரம், ராமராயர் மண்டபம், புது ராமநாதபுரம் சாலை, சிஎம்ஆர் சாலை, மேலவாசல், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் அம்மா உணவகங்களில் ஆணையர் ஆர். நந்தகோபால் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். புதுராமநாதபுரம் சாலையிலுள்ள உணவகத்தில் சாம்பாருடன் இட்லியை சாப்பிட்டு பார்த்த அவர் கூறியது:
அம்மா உணவகத்துக்கு மதுரை மக்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது.
ஒவ்வொரு உணவகத்திலும் காலை, பகல் நேரங்களில் எத்தனை பேர் வந்து செல்கின்றனர்? மேலும் உணவு தேவைப்படுகிறதா? எந்தெந்த உணவகத்தில் கூடுதலாக எத்தனை நபர்களுக்கு உணவு தயாரிக்கலாம்? போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, தேவைப்படும் உணவகங்களில் கூடுதல் எண்ணிக்கையில் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
உணவின் தரம் சற்றும் குறையாத வகையில், கண்காணிப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். பொதுமக்களிடம் விசாரித்ததில் பகலில் சாம்பார், தயிர் சாதத்துடன் ஊறுகாய் வழங்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர். இதை ஏற்று, ஜூன் 6-ம் தேதி (இன்று) முதல் அனைத்து உணவகங்களிலும் சாதத்துடன் எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, தயிர் சாதத்தை தாளித்து வழங்கினால், சுவையாக இருக்கும் என பலரும் தெரிவித்தனர். இதன்படி, இன்று முதல் தயிர் சாதம் தாளித்து விற்பனை செய்யப்படும் என்றார்.