தினமலர் 01.04.2010
இன்று முதல் வாகன நுழைவுக் கட்டணம் வசூல் : கன்டோன்மென்ட் நிர்வாகம் அமல்
குன்னூர் : வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் சார்பில், இன்று முதல் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது; நீலகிரி பதிவு பெற்ற வாகனங்கள் தவிர, கன்டோன்மென்ட் எல்லைக்குள் நுழையும் வாகனங்கள், கன்டோன்மென்ட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்; இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கும், கன்டோன்மென்ட் மக்களின் வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் டில், ஏழு வார்டுகள் உள்ளன; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மத்திய அரசின் சொற்ப அளவிலான நிதி, கன்டோன்மென்ட் எல்லைக்குள் உள்ள வீடு, கடைகளில் இருந்து கிடைக்கும் வரி இனங்கள் மட்டுமே, நிதி ஆதாரமாக இருந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் கன்டோன்மென்ட்டில் பல பணிகள் தேங்கியுள்ளன.
வருமானத்தை உயர்த்த திட்டம்: கன்டோன்மென்ட்டின் வருமானத்தை உயர்த்த, கடந்த இரு ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; ஒரு கட்டமாக, கன்டோன் மென்ட் எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க, 2008ம் ஆண்டு திட்டமிடப்பட்டு, அந்தாண்டு நவம்பர் மாத போர்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களின் ஆட்சேபனையை அறிந்துக் கொள்ள, கடந்தாண்டு ஜனவரி மாதம் பொது அறிவிப்பு செய்யப்பட்டு, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. மக்களிடம் இருந்து எவ்வித ஆட்சேபனையும் வராததால், கன்டோன்மென்ட் போர்டு தலைமை அலுவலகத்துக்கு தீர்மானம் அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது.
இன்று முதல் அமல்: கடந்த மாதம் 13ம் தேதி நடந்த போர்டு கூட்டத்தில், நுழைவு வரி வசூலிக்கும் உரிமம், டெண்டர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. தனியார் ஒருவர் 41 லட்ச ரூபாய்க்கு டெண்டர் எடுத்தார்; இதன்படி, இன்று முதல் நுழைவு வரி வசூலிக்கும் பணி துவங்க உள்ளது.
குன்னூர் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் பிருந்தாவன் பள்ளி நுழைவு வாயில், பாய்ஸ் கம்பெனி மஞ்சுதளா சி.எஸ்.ஐ., பள்ளி முகப்பு, கன்டோன்மென்ட் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சப்ளை டிப்போ, ஜிம்கானா கிளப், பாரத் நகர், கேட்டில் பவுண்டு, கூர்கா ஹில், பந்துமி கோதுமை ஆராய்ச்சி நிலையம் ஆகிய எட்டு இடங்களில், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கட்டண விபரம்: பஸ், லாரி, டிரக்குகளுக்கு 40 ரூபாய், மேக்சிகேப் வேன், மினி பஸ்களுக்கு 30, இலகு ரக வாகனம், சுற்றுலா வாகனம், டாக்சி, கார், ஜீப்களுக்கு 15, மூன்று சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது; இரு சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
வெலிங்டன் கன்டோன்மென்ட் எல்லைக்குள் வாகனம் வைத்துள்ளவர்கள், ஆண்டு கட்டணமாக 250 ரூபாய், எல்லைக்குள் உள்ள ஆட்டோ உரிமையாளர்கள், ஆண்டு கட்டணம் 50 ரூபாய் செலுத்தி, டோக்கனை பெற்றுக் கொண்டால், ஆண்டு முழுவதும் தங்கள் வாகனங்களை ஓட்டிக் கொள்ளலாம்.
அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு: நீலகிரி மாவட்ட பதிவு பெற்ற வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; நீலகிரியில் வசிப்போர், பிற மாநில, மாவட்ட பதிவு பெற்ற வாகனங்களை வைத்திருந்தால், தங்களின் முகவரி சான்றை கன்டோன்மென்ட் அலுவலகத்தில் காண்பித்து உரிய அங்கீகார சான்று பெற்று, கட்டண விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.
மத்திய, மாநில அரசு வாகனங்கள், அரசுப் பணிக்காக இயக்கப்படும் தனியார் வாகனங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான வாகனங்கள், ஆம்பு லன்ஸ், தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், எம்.ஆர்.சி., ராணுவ முகாமுக்கு சொந்தமான வாகனங் கள், ராணுவப் பயிற்சி அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.