தினமலர் 08.12.2010
இரு ஆண்டாக ஏலம் போகாத தாராபுரம் பஸ்ஸ்டாண்ட் ஹோட்டல்
தாராபுரம்: தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் உணவுக்காக பஸ்கள் நின்று செல்லாததால், போதிய வியாபாரமாகாத ஹோட்டலை, குத்தகைக்கு எடுக்க யாரும் முன் வர மறுக்கின்றனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பஸ்களில் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டலில் தொலை தூர பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்ஸை நிறுத்தி உணவு சாப்பிட்டுச்செல்வதுவழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் தாராபுரம் – மதுரை மார்க்கத்தில் தாராபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இரு ஹோட்டல்கள் துவக்கப்பட்டன.
அங்கு பஸ்களை நிறுத்துவதை டிரைவர், கண்டக்டர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அனைத்து அரசு பஸ்களும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அங்கு நின்று செல்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் அதிகரிக்க, பஸ் ஸ்டாண்டு குத்தகை இனங்கள்தான் வழிவகுக்கும். பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்கு நுழைவு வரி வசூல், இளநீர், கட்டணக் கழிப்பிடம், வணிக வளாக கடைகள் என பல்வேறு குத்தகை இனங்களை, பொதுமக்கள் போட்டி போட்டு அதிக தொகைக்கு ஏலம் கோருவர். நகராட்சி வருவாயை அதிகரிக்க இது உதவும்.
தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் உணவுக்காக அரசு பஸ்கள் நிறுத்தப்படாததால், பஸ் ஸ்டாண்டு ஹோட்டல் வியாபாரமின்றி நஷ்டம் ஏற்பட்டது. நகராட்சிக்கு வாடகை கூட கட்ட முடியாத நிலை ஹோட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்டது. அவரும், கடையை பூட்டிச் சென்றார். அதன் பின், இரண்டு ஆண்டுகளாக எவரும் ஹோட்டல் இனத்தை ஏலம் எடுக்க முன் வரவில்லை. நகராட்சி சார்பில் பல முறை டெண்டர் கோரியும் பயனில்லை.தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல் ஏலம் போகாமல், வெள்ளரி மற்றும் பல்வேறு சிறு கடைகள் அங்கு தோன்றியுள்ளன. நகராட்சிக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.