தினமலர் 19.04.2010
இறைச்சி விற்பனையாளர்களை வதைக்கும் ஆடு வதைக்கூடம் : கட்டணம் அதிகம் என்பதால் புறக்கணிப்பு
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஆடுவதை கூடத்தில், ஒரு ஆட்டுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை மாநகராட்சியோடு ஒப்பிடும் போது, மிக மிக அதிக கட்டணம் என்பதால், ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக, ஆடு வதைக் கூடத்தை புறக்கணித்து விட்டனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்படும் ஆட்டிறைச்சி விற்பனை கடைகளுக்காக, 51 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ., தரச்சான்றும் பெறப்பட்டுள்ளது. ‘ப்ரி மார்ட்டம்‘ அறை, ஆடுகளை பரிசோதிக்க டாக்டர்கள், ‘ஸ்டன்னஸ்‘ மயக்க நிலையை ஏற்படுத்தி ஆடு அறுக்கும் வசதி, ‘ஹலால்‘ முறை, பலகட்ட சுத்தம், மாநகராட்சி சீல், கழிவு நீரை சுத்திகரிக்க யு.ஏ.எஸ். பி.ஆர்., சுத்திகரிப்பு முறை, திடக்கழிவை உரமாக மாற்றுதல், வளாகத்தை தூய்மைப்படுத்த சூரிய வெப்பத்தில் இயங்கும் ‘சோலார் வாட்டர் ஹீட்டர்‘ என நவீன வசதிகளுடன் இக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடுவதைக்கூடம், கடந்த முதல் தேதி திறந்து வைக்கப்பட்டது; லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டும், இன்னும் செயல் பாட்டுக்கு வரவில்லை. காரணம், ஒரு ஆட்டுக்கு கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பதே. இந்த அதிகபட்ச கட்டண நிர்ணயத்தை, ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
கோவை மாநகராட்சியில் உள்ள ஆடுவதைக்கூடத்தில், ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ரூபாய் வரை மட்டுமே ஒரு ஆட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், போதிய இட வசதியின்மை, ஆடுகளை கொண்டு வந்து, திருப்பி எடுத்துச் செல்வதில் உள்ள சிரமம் உள்ளிட்டவற்றால், ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆடுவதைக் கூடம் செல்வதை புறக்கணித்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் 220 ஆட்டிறைச்சி விற்பனைக் கடைகள் செயல்படுகின்றன. இவை தவிர, எல்லையோர பகுதிகளையும் சேர்த்தால் 300 கடைகள் வரை உள்ளன. கடந்த காலங்களில் ஒரு ஆட்டுக்கு ஐந்து ரூபாய் வீதம் ஒப்பந்ததாரர் வசூலித்தார். குறைந்தபட்சம் வாரம் 6,500 ஆடுகள் வெட்டப்படுகின்றன. இவ்வகையில், 33 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்தப்பட்டது. ஆண்டுக்கு, 17 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டது.
கன்னிவாடி, முத்தூர், பரமத்தி, குண்டடம், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதி ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள், ஆடுகளைக் கொள்முதல் செய்கிறோம். எல்லாருக்கும் ஒரே சுங்கவரிதான். திருப்பூரில் ஆடுவதைக் கூடத்துக்குச் சென்று 20 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது ஒரு ஆட்டுக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிப்பது எவ்வகையில் நியாயம். அப்படியானால், ஏறக்குறைய 1.7 கோடி ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
கோவை மாநகராட்சி உக்கடத்தில் கட்டியுள்ள ஆடுவதைக்கூடத்தில் ஐந்து, ஏழு, 10 ரூபாய் என்ற அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள ஆடுவதைக் கூடம் ஐந்து ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. திருப்பூரிலோ 2,500 சதுர அடிக்குள் அமைந்துள்ளது. சிறிய கூடம் என்பதற்காக சொல்லவில்லை. நகரின் வெவ்வேறு பகுதியில் இருந்து எப்படி ஆடுகளைக் கொண்டு வர முடியும். வாகனங்களில் அதிக ஆடுகளை ஏற்றி வர அரசு தடை விதித்துள்ளது. கட்டிப்போட்டு கொண்டு வந்தால், மிருகவதை தடைச்சட்டம் பாயும். மாநகராட்சியின் எல்லையில் உள்ள பகுதியில் இருந்து ஆட்டை நடத்தி, இழுத்து வர முடியாது. வெட்டிய ஆட்டை எப்படிக் கொண்டு செல்வது.
அதிகபட்சம் 20 ஆடுகளைக் கட்டி வைக்கக்கூட, ஆடுவதைக்கூடத்தில் இடமில்லை. ஒரு சமயத்தில் 50 ஆடுகள், 60 ஆடுகளை ஓட்டலுக்கு சப்ளை செய்யும், ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் கொண்டு வந்தால், எப்போது வெட்டி முடிப்பார்கள். தேவையற்ற தாமதம் ஏற்படும். ஒரு ஆட்டுக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, வாகனத்துக்கு வாடகை கொடுத்தால், இறைச்சி விலையை உயர்த்த வேண்டி வரும். இதனால், தொழில் மிகவும் பாதிக்கப்படும்.
ஆட்டிறைச்சி விற்பனையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கட்டணத்தை ஐந்து ரூபாயாகக் குறைக்க வேண்டும். கோவை மாநகராட்சியுடன் ஒப்பிட்டு பார்க்க, நமது மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும், கூடுதலாக இரண்டு இடங்களில் ஆடுவதைக்கூடம் அமைக்க வேண்டும். அப்போதுதான், அனைத்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்களும் தாமதமின்றி ஆடுகளை வெட்ட முடியும். கொண்டு வருவதிலும் சிரமம் இருக்காது. 50 ரூபாய் கட்டணம் மிக மிக அதிகம் என்பதை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேயர், இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு கண்டால் மட்டுமே, ஆடுவதைக் கூடத்துக்கு செல்வோம். எங்களால், ஸ்டிரைக் செய்ய முடியாது. செய்தாலும் பலன் இருக்காது. எனவே, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களை நம்பி உள்ளோம். இவ்வாறு, ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சியே நிர்ணயிக்கணும்! ஆடுவதைக்கூடத்தில் ஒரு ஆட்டுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டிய பொ றுப்பு, மாநகராட்சியை சேர்ந் தது. மற்ற மாநகராட்சிகளில் எவ்வளவு ரூபாய் வசூலிக்கிறார்கள், நம்முடைய மாநகராட்சியில் எவ்வளவு வசூலிக்க வேண் டும் என்பதை திட்டமிட்டு, மாமன்ற கூட்டத்தில் தீர்மானமாக, விவாதத்துக்கு வைக்க வேண்டும்.
கவுன்சில் விவாதத்துக்கு பின்பே, கட்டணம் நிர்ணயிக்கப் பட வேண்டும். தனிப்பட்ட முறையில், கட்டணம் நிர்ணயித்து, வசூலிக்கக்கூடாது. திருப் பூரில், ஆடு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தாலே 17 லட்சம் ரூபாய் வசூலிக்கலாம். எனவே, அருகில் உள்ள கோவை மாநகராட்சியில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை, கேட்டறிந்து, அதை, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றுவதே சிறந்தது. இல்லையெனில், ஆடுவதைக்கூடம் பயன்படுத்தப்படாமலேயே வீணாகி விடும