தினமலர் 24.09.2010
இலஞ்சி டவுன் பஞ்.,சிறப்புகூட்டத்திற்கு ஐகோர்ட் தடை
தென்காசி:இலஞ்சி டவுன் பஞ்.,தலைவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நடக்க இருந்த சிறப்பு கூட்டத்திற்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.இலஞ்சி டவுன் பஞ்.,துணைத் தலைவர் காத்தவராயன் உட்பட 12 கவுன்சிலர்கள் டவுன் பஞ்.,தலைவர் பிச்சையா மீது புகார் தெரிவித்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். இதனையடுத்து இதுபற்றிய சிறப்பு கூட்டம் நேற்று நடப்பதாக பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அறிவித்திருந்தார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள துணைத் தலைவர் காத்தவராயன், கவுன்சிலர்கள் துரை, அருணாசலம், ராமச்சந்திரன் (எ) மோகன், பரமசிவன், இசக்கி, செல்லத்துரை, மைதீன் பாத்து, சிவகாமி, அங்கம்மாள், சுப்புலட்சுமி, சின்னத்தாய் வந்தனர். கூட்டத்தை நடத்த வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சுரேஷ்குமார் ஐகோர்ட் இடைக்கால தடையால் கூட்டம் நடத்தப்படவில்லை என்றார்.இதுபற்றி உதவி இயக்குநர் கூறும் போது, “சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் இலஞ்சி டவுன் பஞ்., சிறப்பு கூட்டம் நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் நடத்த இயலாது‘ என்றார்.கூட்டம் நடக்க இருந்த டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கூறிய விளக்கத்தை ஏற்று துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர். சிறப்பு கூட்டத்தை காண அதிகளவில் கூடிய பொதுமக்களும் திரும்பி சென்றனர்.