தினபூமி 21.11.2013
இலவச கொசுவலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.21 – 5 லட்சம் பேருக்கு விலையில்லாக் கொசுவலை வழங்கும்
திட்டத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசு
செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:_
சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்
தடங்களின் கரைகள் அவைகளை யொட்டிய சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு
கொசுத் தொல்லையினைத் தவிர்க்கவும், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா,
டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஐந்து லட்சம்
எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின்
முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78,184
கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள்
வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை
நேற்று வழங்கினார்.
முதலமைச்சரின் 64வது பிறந்த தினத்தை சென்னை மாநகரின் சுற்றுப்புற சூழல்
பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதல் தடுக்கும் நாளாக சென்னை
மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு கடந்த 24.2.2012 அன்று சென்னை மாநகரம்
முழுவதும் மாணவ, மாணவியர் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
மேற்கொள்ளப்பட்டது.
அன்றைய தினமே சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 64 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, முதல்_அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு
ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடிட சென்னை மாநகராட்சி
மாமன்றக் கூட்டத்தில் 29.08.2013 அன்று சிறப்புத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் பிறந்த
தினத்தன்று சென்னை மாநகராட்சி மூலமாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும்
உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி, பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில்
வைட்டமின் ‘நீஏ’ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும்
திட்டம்; சென்னை மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்திட பொதுமக்களுக்கு 5.5
லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச்செடி கன்றுகள் வழங்கும் திட்டம்;
ஆகியவற்றைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்_அமைச்சர்
ஜெயலலிதா நேற்று பப்பாளி மரக்கன்றுகள் மற்றும் நொச்சிச் செடி கன்றுகளை
வழங்கினார்.
சென்னையிலுள்ள படித்த ஏழை எளிய பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக,
சென்னை மாநகராட்சியால் முதற்கட்டமாக 710 ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு
கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் வகையில் சைதாப்பேட்டையிலுள்ள சென்னை
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் பெரம்பூர் பந்தர் கார்டனிலுள்ள சென்னை
மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு
பயிற்சி மையங்களை முதல்_ அமைச்சர் ஜெயலலிதாநேற்று
தொடங்கி வைத்து, 4 நபர்களுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம்,
நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்,
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா
பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச்
செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும்
அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.