தினமலர் 13.08.2010
இலை வியாபாரிகள் மனு; மாநகராட்சிக்கு, ஐகோர்ட் உத்தரவுமதுரை: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் மேற்குபுறம் கடைசி வரிசையில் கடை ஒதுக்க கோரும் வாழை இலை வியாபாரிகள் சங்க மனுவை 30 நாட்களுக்குள் பரிசீலிக்கும்படி மாநகராட்சி கமிஷனருக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை வாழை இலை கமிஷன் வியாபாரிகள் சங்க துணை தலைவர் நாகேந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு:சங்கத்தில் 19 உறுப்பினர்கள் உள்ளனர். மீனாட்சி கோயில் அருகேவுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைசி வரிசையில் இலை கடைகள் நடத்தி வருகிறோம். மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் திறந்தவெளியில் இலைகளை வைக்க, கடைசி வரிசை ஒதுக்கி கொடுக்கப்பட்டது. தற்போது மார்க்கெட் மாட்டுத்தாவணி அருகே மாற்றப்படவுள்ளது. புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைசி வரிசையை ஒதுக்கி கொடுக்கும்படி விண்ணப்பித்தோம். இதற்கு ஒவ்வொருவரும், 60 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தோம். எங்களுக்கு கடை ஒதுக்குவதாக, கமிஷனர் தெரிவித்தார். தற்போது வேறு நபர்களுக்கு கடை ஒதுக்க முயற்சி நடக்கிறது. எங்களுக்கு கடைகளை ஒதுக்க, உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சாமிதுரை, ஞானகுருநாதன் ஆஜராயினர். மாநகராட்சி சார்பில் வக்கீல் ரவிசங்கர் ஆஜரானார். நீதிபதி எம்.ஜெயபால், “”கடை ஒதுக்க கோரும் மனுதாரர் மனுவை 30 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.