தினத்தந்தி 01.10.2013
இளம் செஞ்சிலுவை இயக்க பயிற்சி முகாம் நிறைவு விழா: மக்களுக்கு
சேவை செய்ய வயது தடையில்லை மேயர் கார்த்தியாயினி பேச்சு
மக்களுக்கு சேவை செய்ய வயது தடையில்லை என்று இளம் செஞ்சிலுவை இயக்க
பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மேயர் கார்த்தியாயினி தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
இளம் செஞ்சிலுவை சங்க இயக்கத்தின் தமிழக கிளை சார்பில் காட்பாடி ஜெயின்
பள்ளியில் 4 நாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் மாநிலம் முழுவதும்
இருந்து 200 மாணவ– மாணவிகளும், 60 ஆலோசகர்களும் கலந்து கொண்டனர். முகாமை
வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.
2–வது நாள் பயிற்சி முகாமில் ‘சுகாதாரம்‘ என்ற தலைப்பில் டாக்டர் அருளாளன்,
‘சேவை‘ என்ற தலைப்பில் வேலூர் கல்வி மாவட்ட இணை அமைப்பினர் முருகேசன்
ஆகியோர் பேசினர். 3–வது நாள் முகாமில் மாணவ– மாணவிகளுக்கு முத்து
நாகலிங்கசுவாமி யோகா பயிற்சி அளித்தார். இளம் செஞ்சிலுவை இயக்க வேலூர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமினாள்பீபீ, செஞ்சிலுவை சங்கத்தின் கொள்கைகள்
பற்றி பேசினார்.
நிறைவு விழா
முகாமின் நிறைவு விழாவிற்கு திருப்பத்தூர் கல்வி மாவட்ட துணைத்தலைவர்
என்.பிரகாசம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிபி.மகராஜன் வரவேற்றார்,
மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் முகாம் அறிக்கை வாசித்தார். சிறப்பு
விருந்தினராக வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு,
சிறந்த இளம் செஞ்சிலுவை இயக்க மாணவர்களுக்கு விருது, பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சிறிய வயதில் சேவை செய்ய வேண்டும் என்ற உணவர்வை ஏற்படுத்துவதுதான் இளம்
செஞ்சிலுவை சங்க அமைப்பாகும். மக்களுக்கு சேவை செய்ய வயது தடையில்லை,
மாணவர்கள் தங்கள் தனி திறனை வளர்த்துக் கொள்ள இதுபோன்ற கல்வி இணை
செயல்பாடுகள் உதவி புரிகிறது. சுகாதாரம், சேவை, நட்பு போன்ற நல்ல கொள்கைகளை
கொண்டது செஞ்சிலுவை சங்கம். இது வேற்றுமை இன்றி வாழ வேண்டும் என்பதற்கு
வித்திடுதல் ஆகும். இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் இதனை பின்பற்றி நடக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இந்திய செஞ்சிலுவை சங்க வேலூர் மாவட்ட துணைத்தலைவர்
எம்.வெங்கடசுப்பு, ஜெயின் பள்ளி பொருளாளர் கே.ராஜேஷ்குமார், பள்ளி முதல்வர்
கே.வித்யா, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் விஜயராகவலு, சீனிவாசன்,
ரமேஷ்குமார், இளம் செஞ்சிலுவை இயக்க மாவட்ட பொருளாளர் நாகராஜன் உள்பட பலர்
பேசினார். முடிவில் துணைத்தலைவர் சிவவடிவு நன்றி கூறினார்.