தினத்தந்தி 14.06.2013
ஈரோடு காந்திஜி ரோடு அம்மா உணவகத்தில் அமைச்சர் சோதனை
ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் சோதனை செய்தார்.
அமைச்சர் திடீர் சோதனை
பெரிய நகரங்களில் உள்ள கூலித்தொழிலாளர்கள், ஏழை–எளியவர்கள் தரமான உணவு
பெறும் வகையில் சென்னை உள்பட 10 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்க
முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு
உள்பட்ட 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த
உணவகங்களில் சாப்பிடுவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த
நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நேற்று ஈரோடு
காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் சோதனை செய்தார்.
அறிவுரை
உணவகத்துக்குள் சென்ற அவர், சமைக்க பயன்படுத்தும் அரிசி தரமானதா? என்று
பார்வையிட்டார். மேலும் தரமான காய்கறிகள் பயன்படுத்தப்படுகிறதா? சமையல் அறை
சுத்தமாக வைக்கப்பட்டு உள்ளதா? சுகாதாரமான முறையில் உணவு தயார்
செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அம்மா உணவக
பணியாளர்களுக்கு பல அறிவுரைகளையும் வழங்கினார். இந்த சோதனையின் போது ஈரோடு
மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, மண்டல தலைவர் ரா.மனோகரன், உதவி ஆணையாளர்
ரவிச்சந்திரன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி
உள்பட பலர் இருந்தனர்.