தினத்தந்தி 03.09.2013
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
வெறிநாய் நோய் தடுப்பூசி
ஊட்டியில் செயல்பட்டு வரும் சர்வதேச கால்நடை சேவை அமைப்பு சார்பில்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தெருநாய்களுக்கு வெறிநாய் நோய்
தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 50
ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக லண்டனில் இருந்து 20 டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுரை மற்றும் ஈரோடு ஆகிய 2 மாநகராட்சிகளில் வெறிநாய் நோய்
தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியில் 5 ஆயிரம் நாய்களுக்கு
தடுப்பூசி போடுவதற்காக இலக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நேற்று முதல்
இதற்கான பணிகள் தொடங்கியது.
172 நாய்கள்
முதற்கட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு மற்றும் 16-வது
வார்டுகளில் நேற்றுக்காலை வெறிநாய் நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதில் அந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கும்
நாய்களுக்கு இலவசமாக வெறிநாய் நோய் தடுப்பூசி போடப்பட் டது. அப்போது 10
பேர் கொண்ட குழுவினர் 2 வார்டுகளுக்கு சென்று அந்த பகுதிகளில்
சுற்றித்திரிந்த தெருநாய்க்களை வலை வைத்து பிடித்தனர். அதன்பின்னர்
பிடிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசிகளை போட்டு விட்டு விடுவித்தனர். ஈரோடு
கங்காபுரம் பகுதியில் 70 நாய்களுக்கும், காந்திநகர் பகுதியில் 102
நாய்களுக்கும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.