தினமலர் 22.04.2010
உடுமலையில் செயல்படும் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை! மருத்துவ கழிவை விதிமுறை மீறி கொட்டக்கூடாது
உடுமலை : அபாயகரமான மருத்துவ கழிவுகளை விதிமுறையை மீறி பொதுக்கழிவுகளுடன் கொட்டும் மருத்துவமனைகள் குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளனர். சம்மந்தப் பட்ட நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
உடுமலை நகர பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய 21 மருத்துவமனைகள், 30க்கும் அதிகமான கிளினிக் மற்றும் 15 மருத்துவ பரிசோதனை மையங்கள் உள் ளன. இங்கிருந்து மருத்துவ கழிவுகள் சுகாதார விதிகளின் படி அகற்றப்படுவதில் லை. பிற பொதுக்கழிவுகளுடன் சேர்த்து மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுகிறது. நாள்தோறும் பல நூறு கிலோ மருத்துவ கழிவுகள் நேரடியாக குப்பை தொட்டிகளில் திறந்த வெளியில் கொட் டப்படுவதால் துர்நாற்றமும், தொற்று நோய்களும், குப்பைகளை அள்ளும் பணியாளர்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் அவல நிலையும் உள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் மூலம் மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், உடுமலையில் இயங்கும் பெரும்பாலான மருத்துவமனைகள் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. செலவுகளை குறைக்க பொது குப்பை தொட்டியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது.
இதையடுத்து, நகராட்சிநகர் நல பிரிவு அதிகாரிகள் உடுமலையில் இயங்கி வரும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மருத்துவ கழிவுகளை நேரடியாக நகராட்சி குப்பை தொட்டிகளில் கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு கொட்டுவது பொதுசுகாதார சட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதியின் கீழ் குற்றமாகும்.
மருத்துவ கழிவுகளை நகராட்சி கழிவுகளோடு சேர்க்காமல் மாவட்டத்திற்கென அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட நிறுவனத்தின் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். சட்டங்களை பின்பற்றாத மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.முகவரி, தினசரி உற்பத்தியாகும் மருத்துவ கழிவுகளின் அளவு, மருத்துவம் அல்லாத கழிவுகளின் அளவு, படுக்கைகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்களை நிரப்பி நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். இவ்வாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த பிப்., மாதம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனைகள், கிளினிக் மற்றும் பரிசோதனை மையங்கள் பல மாதங்களாகியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. நகரின் முக்கிய வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர் பிற கழிவுகளோடு சேர்ந்து கிடந்த பயன்படுத்தப்பட்ட ‘சிரிஞ்ச்‘ குத்தி நோய்த்தாக் குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. துப்புரவு தொழிலாளர்கள் மருத்துவமனை இயங்கும் பகுதிகளில் குப்பை அள்ள தயக்கம் காட்டி மருத்துவ கழிவுகள் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இரண்டாம் கட்டமாக நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர் நல அலுவலர்கள் குழு நகரப்பகுதியில் ஆய்வு நடத்தினர். பழநி ரோடு, அனுஷம் நகர், வெங்கடகிருஷ்ணா ரோடு உட்பட இடங்களில் பொது கழிவுகளுடன், ரத்தகறைகளுடன் கூடிய பஞ்சு, காட்டன் துணிகள், ஊசியுடன் கூடிய சிரஞ்ச், சிறுநீர்பைகள், குளுக்கோஸ் ஏற்றப்பட்ட செட்கள், பயன் படுத்தப்பட்ட ரத்தகறைகளுடன் கூடிய வென்பிளான், நஞ்சுக்கொடி போன்ற அபாய மருத்துவ கழிவுகள் கொட்டப் பட்டிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் குழுவினர் மருத்துவமனை மற்றும் பிற நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர். உரிய விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர் நல பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: உடுமலை நகரில் இயங்கி வரும் மருத்துவமனைகள் முறையாக மருத்துவ கழிவுகளை அகற்றாததால் நோய் தொற்று மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. பல முறை நோட்டீஸ் அளித்தும் சம்மந்தப்பட்ட நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.