தினத்தந்தி 29.08.2013
உடுமலையில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி? நகராட்சி ஆணையாளர் அறிவுரை
தொட்டியை சுத்தம் செய்வது எப்படி? என்று நகராட்சி ஆணையாளர்
கே.பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டம்
உடுமலை நகராட்சியில் நச்சுத்தன்மை கொண்ட
கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்) சுத்தம் செய் யும் போது தனியார்
கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்
நடந்தது.
இதில் நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
பாதுகாப்பு உபகரணங்கள்
கழிவுநீர் வாகனம் எண், உரிமையாளர் மற்றும்
பணியாளர்களின் பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங் களை நகராட்சியில் பதிவு
செய்து கொள்ள வேண்டும். மலக்கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது
பணியாளர்கள் பாதுகாப்பு ஹெல்மெட், கம்பூட்ஸ் முகக்கவசம் போன்ற உபகரணங்கள்
அணிந்து பணியாற்ற வேண்டும். மலக்கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம்
செய்யக்கூடாது. மனிதரின் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி
குற்றமாகும்.
எனவே கழிவுகளை எந்திரங்கள் மூலமாக மட்டுமே
சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய் யும் போது அருகே
வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கிருமி
நாசினிகளை பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்கள்
நோயாளிகளாகவோ, முதியவர்க ளாகவோ இருக்கக் கூடாது.
ஆயுள் காப்பீடு அவசியம்
சுத்தம் செய்த பின்னர் கழிவுநீர்
வாகனத்தில் கசிவு ஏற்படாமல் நன்றாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும்.
கழிவுகளை நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சேர்க்க வேண்டும்.
மலக்கழிவு நீர் எடுக்க செல்லும் இடத்தை முன்கூட்டியே நகராட்சிக்கு
தெரிவிக்க வேண்டும். கழிவுகளை சாக்கடை களிலோ, காலி இடங்களிலோ
கொட்டக்கூடாது. கழிவுகளை அகற்றும் பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு
செய்திருக்க வேண்டும்.
சட்ட விரோத செயல்களோ அல்லது அசம்பாவிதமோ
நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களே பொறுப்பு. வீடுகளில்
கழிவுநீர் தொட்டியை தனியார் மூலம் சுத்தம் செய்யும் போது பாதுகாப்பு
உபகரணங்களுடன் பணி செய்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் வீட்டு உரிமையாளர்கள் பொறுப்பாளர்
ஆக்கப்படுவார்கள். கழிவு நீர் தொட்டியை பகல் நேரங்களில் மட்டுமே சுத்தம்
செய்ய வேண்டும். இரவு நேரங்களில் பணி செய்தால் கழிவுநீர் வாகனம் பறிமுதல்
செய்யப்படும். இவ்வாறு ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில்,
சுகாதார ஆய்வாளர்கள் எம்.இளங்கோவன், பி.செல்வம், ஆர்.செல்வம்,
எம்.சிவக்குமார் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து
கொண்டனர்.