தினமலர் 17.06.2013

40 மைக்ரானுக்கு மேலாக இருந்தாலும், உபயோகிப்பாளர்களுக்கு இலவசமாக
வழங்கக்கூடாது; தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என நகராட்சி
நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதன் பயன்பாட்டினை தடுக்கும் வகையில்
இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். உடுமலை
நகராட்சியில், கடந்தாண்டு ஜூலை மாதம் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள
பாலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, அபராதம் விதிக்கவும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் தடை அமலுக்கு
வந்தது. இவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
நகராட்சி
அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு இவை பறிமுதல்
செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட இவற்றை பயன்படுத்தும் வர்த்தக
நிறுவனங்கள், உபயோகிப்பாளரான பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு
உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நகராட்சி சாதாரணக்கூட்டத்தில்,
“பாலித்தீன் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011ன்படி,
எந்தவொரு பாலித்தீன் பைகளும், 40 மைக்ரானுக்கு மேற்பட்டதாக இருந்தாலும்
உபயோகிப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே,
வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு (பொதுமக்கள்)
வழங்கும் 40 மைக்ரானுக்கு மேற்பட்ட பாலித்தீன் பைகளாக இருந்தாலும் தனியாக
கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இதனால் பொதுமக்களிடம் இது குறித்த
விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மறு சுழற்சி, மறுவினியோகம், உபயோகத்தினை குறைத்தல் என பழக்கப்படுத்தும் வகையில், உள்ளாட்சி நிறுவனங்கள் தொகை நிர்ணயம் செய்திட
வேண்டும். 40 மைக்ரானுக்கு மேற்பட்ட சிறிய ரக பை ஐந்து ரூபாய், பெரிய ரக
பை 10 ரூபாய் என நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும்,’ எனத்தீர்மானம் கொண்டு
வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
“சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களிடம்
படிப்படியாக பாலித்தீன் பயன்பாட்டினை குறைக்கவும் இத்திட்டம் கொண்டு
வரப்பட்டுள்ளது. இதற்கு வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும்.
ஏற்கனவே, பாலித்தீன் பயன்படுத்த தடை, மீறினால் அபராதம்
போன்றவை நடைமுறையில் உள்ளதால், இத்திட்டம் செயல்படுத்தினால் கட்டுப்படுத்த
முடியும் என நம்புகிறோம்,’ என்றனர்.
சாத்தியமாகுமா?
நகரப்பகுதியில்
பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்தாலும், பயன்பாடு குறைந்தபாடில்லை. பல
இடங்களிலும் இவற்றிலேயே பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், கடைகளில் இலவசமாக வழங்காமல் கட்டணம் நிர்ணயிக்க சொல்லி வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளில் பாலித்தீன் பைகளுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா
என்றும், இதை தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் மற்றும்
கண்காணிப்பு பணிகளை தொடர்ந்தால், பாலித்தீன் இல்லா நகரமாக உடுமலையை மாற்ற
முடியும்.