தினமலர் 28.05.2010
உணவு பொருளில் கலப்படம் கடைகளில் மீண்டும் சோதனை
செக்கானூரணி:செக்கானூரணியில் உள்ள கடைகளில் கலப்பட, காலாவதி உணவு பொருட்கள் விற்பனை குறித்து நேற்று இரண்டாவது முறையாக சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். செக்கானூரணியில் உள்ள கடைகளில் கலப்பட உணவு பொருட்கள் விற்கப்படுகின்றனவா? என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது காலாவதி தேதி குறிப்பிடப்படாத, அனுமதியற்ற உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இப்ராகிம், சுகாதார ஆய்வாளர்கள் பொன்னம்பலம், போஸ், முருகேசன், முருகன், பழனி, போலீஸ் ஏட்டுகள் செந்தில், வேல்முருகன், செல்வம், சுகாதார பணியாளர்கள் செக்கானூரணியில் உள்ள கடைகளில் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டனர்.
மளிகைக்கடைகள், பழக்கடைகள், கறிக்கடைகள், ஸ்வீட்ஸ்டால், பேக்கரிகளில் சுகாதாரமற்ற வகையில் விற்கப்பட்ட பொருட்களை கைப்பற்றி அழித்தனர். அப்போது பெரும்பாலான கடைகள் “லைசென்ஸ்‘ இல்லாமல் நடத்தப்படுவது தெரிந்தது. “உடனே கடைகளுக்கு லைசென்ஸ் பெறவேண்டும் என்றும், தொடர்ந்து இது போன்ற தரமற்ற, காலாவதி பொருட்களை விற்பனை செய்தால்‘ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.