தினமலர் 12.03.2010
உணவு பொருள் கடைகளில் சுகாதார சீர்கேடு:வாணியம்பாடியில் அதிகாரிகள் திடீர் ‘ரெய்டு‘
வாணியம்பாடி:வாணியம்பாடியில் உணவு பொருள் கடைகளில் சுகாதார சீர்கேடு உள்ளதாக வந்த புகாரை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர்.
வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் சுகாதார சீர்கேடு உள்ளதாகவும், பழைய எண்ணையை பயன்படுத்தி வருவதாகவும், கலப்பட பொருட்களால் உணவு வகைகள் செய்வதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன,இதையடுத்து கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நகர் நல அலுவலர் டாக்டர் பிரியாராஜ் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், ஜான்சன், நடராஜன் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு நியூடவுன், சி.என்.ஏ., சாலை கூஜா காம்பவுண்டு ஆகிய பகுதிகளில் உள்ள சிக்கன், மீன், மட்டன் வறுவல் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளிலும் அதிரடி ரெய்டு நடத்தினர்.அப்போது கடைகளில் சுகாதார சீர்கேடாக வைத்திருந்தது கண்டறிந்து முதல் கட்டமாக கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் பழைய எண்ணையை பயன் படுத்தப்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தினர்.இதனை தொடர்ந்து நேற்று காலை கணியம்பாடி தெரு, முகமதலிபஜார் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர். அப் போது கடையில் கலப்பட பொருட்கள் மற்றும் பழைய ஸ்டாக் ஆகியவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். 8க்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் நடத்திய ரெய்டில் 3 கடைகளில் இருந்து துவரம் பருப்பு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.