உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
கட்டிட திறப்பு விழா
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் எஸ்.ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிகாரி வரவேற்று பேசினார்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆரம்ப சுகாதார நிலையம்
உதயேந்திரம் பேரூராட்சி பகுதி, கொல்லகுப்பம் பகுதியை கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆம்பூர் தாலுகாவில் இணைத்து விட்டனர். இந்த பகுதியை வாணியம்பாடி தாலுகாவில் சேர்க்க வேண்டும் என கோரியுள்ளீர்கள். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தொடர்ந்து சட்டமன்றத்தில் இதுகுறித்து கேட்டு வருகிறார். தமிழக முதல்வர் இதற்கான தீர்வை விரைவில் ஏற்படுத்துவார்.
மேலும் இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என பேரூராட்சி தலைவர் கோரியுள்ளார். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்தி இந்த பகுதியில் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், பேரூராட்சி செயலாளர் பிச்சாண்டி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசக்திதான், பேரூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் நன்றி கூறினார்.