தினமணி 19.04.2010
உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி!
கிருஷ்ணகிரி, ஏப். 18: உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
பருவமழை பொய்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்கும் வகையில் இம்மாவட்டத்துக்கு ரூ.2 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இம்மாவட்டத்தில் நிலத்தடி நீர் கடந்த ஆண்டைக் காட்டிலும், 10 மீட்டர் குறைந்துள்ளது. இதனால், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியங்களில் அரசு அமைத்துக் கொடுத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் தண்ணீர் இல்லாததால், பயனற்று உள்ளன.
இந்நிலையில் பருவ காலங்களில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல், உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டத்தை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதன்படி, மழைக் காலங்களில், மழைநீர் செல்லும் வழித் தடத்தில் உபயோகமற்று கிடக்கும் ஆழ்துளைக் கிணற்றை சுற்றி 3 மீ. விட்டம், 3 மீ. ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டு, அதில் பல்வேறு அளவுகளைக் கொண்ட ஜல்லி கற்கள் மற்றும் மணல் நிரப்பப்படும். இவ்வாறு செய்வதால் மழைநீரானது நேரடியாக ஆழ்துளைக் கிணற்றின் வழியாக நிலத்தடிக்குச் செல்லும். இதன் மூலம் மழைநீர் வீணாகாமல் நிலத்தடி நீர் 3 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது.
மேலும் இந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகேயுள்ள குடிநீர் வழங்கும் ஆழ்துளைக் கிணறு மற்றும் விவசாயக் கிணறுகளில் நீர் ஆதாரம் உயர வாய்ப்புள்ளது.
“ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் திட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் தடதாரை, ராமசந்திரண், மாதேப்பட்டி, நல்லூர் மற்றும் பர்கூர் ஒன்றியத்தில் குட்டூர் ஆகிய கிராமங்களில் ரூ.2.5 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல பலன் கிடைத்தால் நடப்பாண்டில் மேலும் 14 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது‘ என கிராம குடிநீர்த் திட்ட கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது