தினமணி 12.05.2010
உப்பிடமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்
கரூர், மே 11: உப்பிடமங்கலம் பேரூராட்சிக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் எஸ். ராஜலிங்கம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் மனோகரன், நிர்வாக அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தமிழக முதல்வர் தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, பேரூராட்சி பகுதிகளில் இந்திராகாந்தி தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்வது. புகையிலை குறிச்சியானூரில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் வழங்குவது. மாமரத்துப்பட்டியிலுள்ள சிறுமின் விசைத் திட்டத்திற்கு மின் மோட்டார் வாங்குவது. சின்னகவுண்டனூரில் சிமென்ட் சாலை, லிங்கத்தூரில் தார்ச் சாலையை மாற்றி சிமென்ட் சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், உப்பிடமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு வரும் பஸ்கள் பேருந்து நிலையத்தில் சுமார் 5 நிமிஷம் நின்று செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.