தினமலர் 27.06.2010
உரத்த சிந்தனை : நகரங்கள் பரவட்டும் –கே.எஸ்.ராமகிருஷ்ணன்
இந்தியா விடுதலை அடைந்த பிறகு, நாடெங்கிலும் பெரிய பாசனத் திட்டங்களிலும், பெரிய கனரக ஆலைகளிலும் முதலீடுகள் செய்வதால் ஏற்படுகிற பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், மேலிருந்து கீழே பொசிந்து, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பரம ஏழைகளையும் சென்றடையும் என்று நம்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குறிக்கோள் நிறைவேறவில்லை. 1991க்கு பின், நாட்டின் பொருளாதார கொள்கையில், பெரிய மாற்றம் ஏற்பட்டது.
பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, உலக சந்தையுடன் இந்திய சந்தையை இணைப்பதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள பரம ஏழை மக்களையும் சென்றடையும் என்பது, இந்தப் புதிய கொள்கையின் அணுகுமுறை.ஆனால், இதற்கும் எதிர்பார்த்த பயன் விளையவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் அனேகமாக எல்லாத் தேர்தல்களிலுமே, ஆண்டு கொண்டிருந்த அரசியல் கட்சி அல்லது கட்சிக் கூட்டணி தோற்கடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வருகிறோம்.
காரணம் என்ன?ஏழை மக்கள் தங்கள் பொருளாதார நிலைமை முன்னேறுவதற்காக, இனியும் கால வரையறையின்றிக் காத்திருக்கத் தயார் இல்லை.பரம ஏழைகளின் வறுமையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை, கானல் நீர் தானா? அதை நிறைவேற்றுவதற்கு நம் நாட்டில் வழியே இல்லையா?இருக்கிறது.வறிய நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை நிரந்தரமாக உயர்த்துவதற்குப் புதிய கண்ணோட்டமும், புதிய அணுகுமுறையும் தேவை. மேலிருந்து கீழே பொசியும் என்று நம்பப்பட்டு வந்த உத்திக்கு பதிலாக, பரம ஏழைகள் ஒவ்வொருவருடைய கைகளையும் பற்றி அவர்களை மேலே தூக்கி விடுவதற்கான, புதிய உத்தி தேவை. அந்த உத்தி நிர்வாக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும்.
மாறி, மாறி அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல் கட்சிகளும், தங்களுடைய ஆட்சிக்காலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்களுக்கு, மானிய விலையில் எவ்வளவு லட்சம் டன் அரிசி, கோதுமை மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் வினியோகிக்கப்பட்டன என்ற புள்ளி விவரங்களைக் கூறி, தங்களுடைய கடமை தீர்ந்து விட்டதாகத் திருப்தியடைகின்றன. ஆனால், உதவி பெறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை நிரந்தரமாக உயர்த்துவதற்கு, அது எந்த வகையிலும் பயன் தராது.வறுமைக்கோட்டிற்குக் கீழே முதலில் தள்ளப்படுபவர்கள், சொந்த நிலம் எதுவும் இல்லாத விவசாயக் கூலிகள்; அடுத்துத் தள்ளப்படுபவர்கள், குறைந்த அளவு நிலத்திற்கு மட்டுமே சொந்தக்காரர்கள்.
நமது நகரங்களில் கடந்த 40 ஆண்டுகளில், மக்கள் தொகை பெரும் அளவிற்கு அதிகரித்திருப்பதற்கு காரணம், கிராமப்புறங்களிலிருந்து பிழைப்பு தேடி குடிபெயர்ந்த ஏழைக் குடும்பங்கள் தான்.கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, பெரும் செலவில் அமைக்கப்படுகிற நவீன தொழிற்சாலைகளில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவானவை. கிராமங்களிலிருந்து குடிபெயர்பவர்களின் குடும்பங்களின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும், நகர்ப்புற சில்லறை வேலைகள் துறையில் சுலபமாக வேலை கிடைக்கிறது.
பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பைத் தேடி மும்பை, கோல்கட்டா, டில்லி ஆகிய பெருநகரங்களுக்கு செல்வதற்கு முக்கியமான காரணம், அந்த மாநிலங்களில் இத்தகைய பெருநகரங்கள் போதுமான அளவில் இல்லை என்பது தான்.இந்தியாவில் நக்சலைட்டுகள் என்னும் பயங்கரவாதிகள் வளர்ந்து வரும் பகுதிகளை ஆராய்ந்தால், அந்தப் பகுதிகளிலும் இத்தகைய நகரங்கள் இல்லாதது தெரியவரும். சொந்த கிராமங்களில் பிழைப்புக்கு எந்த ஒரு வழியும் இல்லாததால், பெரிய நகரங்களுக்குக் குடிபெயரும் குடும்பங்களுக்கு, அந்த நகரங்களில் வேலை வாய்ப்பும், வருமானமும் வந்த போதிலும், இத்தகைய குடிபெயர்ப்பால் வேறு பல பாதகங்கள் ஏற்படுகின்றன.
கிராமங்களிலிருந்து குடிபெயரும் மக்களை, அவர்கள் குடிபெயர நினைக்கும் பெரு நகரங்களில், அவர்களுக்குக் கிடைக்கப்போகும் வேலை வாய்ப்புகள், வாழ்க்கை வசதிகளை விடவும் சிறந்த வாய்ப்புகளையும் வசதிகளையும் கிடைக்கச் செய்யக்கூடிய ஒரு அமைப்பில், தடுத்து நிறுத்த வேண்டும். வேறு விதமாகச் சொல்வதானால், ஐந்து லட்சம் மக்கள் வசிப்பதற்கு ஏற்றவையான புதிய நகரங்களைத் திட்டமிட்டுத் தோற்றுவித்து, கிராமங்களிலிருந்து புலம் பெயரும் ஏழை மக்களையும், மற்றவர்களுடன் அங்கு குடியேற்ற வேண்டும்.கடந்த 20 – 30 ஆண்டுகளில், எந்த அரசும் அதிக எண்ணிக்கைகளில், ஏழை மக்களுக்காக மட்டுமின்றி, நடுத்தரப் பொருளாதார வசதி உள்ள குடும்பங்களுக்காகக் கூட புதிய வீட்டு மனைகள், உருவாக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.நம் நாட்டில், இப்போதுள்ள சிறு நகரங்கள் எதையும், எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு செலவழித்தாலும், ஜப்பானில் அல்லது சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு ஒப்பானதாக மேம்படுத்த முடியாது.
ஆனால், சர்வதேச தரத்திற்கு ஈடானவையாகப் புதிய நகரங்களை நமது நாட்டில் தோற்றுவிக்க முடியும்.தமிழகத்தை எடுத்துக் கொண்டோமானால், செம்பரம்பாக்கம், மதுராந்தகம், சாத்தனூர், கிருஷ்ணகிரி, வீடூர், வீராணம், மேட்டூர், மணிமுத்தாறு, பவானிசாகர், வைகை, அமராவதி நீர் தேக்கங்களுக்கு அருகில், இத்தகைய புதிய நகரங்களைத் தோற்றுவிக்க முடியும்.இதனால், இந்த நீர் தேக்கங்களிலிருந்து ஏற்கனவே பாசனம் பெரும் நிலங்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. ஏனென்றால், ஐந்து லட்சம் மக்களின் வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர்த் தேவையின் அளவு, நீர்ப்பாசனத்திற்குத் தேவையான நீரின் அளவில் மிக மிக சொற்பமான சதவீத அளவில்தான் இருக்கும்.இவ்வாறு புதிய நகரம் ஒன்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இடம், ஏற்கனவே உள்ள மாநில அல்லது தேசிய நெடுஞ்சாலை ஒன்றை ஒட்டியோ அல்லது அதனுடன் சுலபமாக இணைக்கப்பட தகுதியானதுள்ளதாகவோ இருக்க வேண்டும்.
இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில், இத்தகைய 500 புதிய நகரங்களை அமைக்க முடிந்து, அவற்றால் ஏற்படும் நில மதிப்பு உயர்வைக் கணக்கிட்டோமானால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டுப் பொருள் உற்பத்தியின் மதிப்பு வியக்கத்தக்க அளவுக்கு உயர்ந்து விடும்.புதிய நகரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் நிலப்பரப்பில் பெரும் பகுதி விவசாயத்திற்கு ஏற்றதல்லாத அல்லது பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாத நிலமாக அமையுமானால், எதிர்ப்பு வலுவிழந்து விடும். நில ஆர்ஜித சட்டத்தின்படி, வாங்கப்படும் நிலங்களுக்கு சந்தை விலையை விட 15 சதவீதம் அதிகமாகக் கொடுக்கலாம் என்பது சட்ட நடைமுறை.
நிலப்பரப்பை ஆர்ஜிதம் செய்வதற்கான ஆரம்ப செலவை மட்டும் அரசாங்கம் ஏற்றால் போதும். புதிய நகரத்தில் மேலே கூறியுள்ள விதத்தில் கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியை வேறு வகைகளில் திரட்ட முடியும். எனவே, இத்தகைய புதிய நகரங்கள் இப்போதுள்ள பெரு நகரங்களின் நெரிசலைக் குறைப்பதுடன், அவற்றிலுள்ள கட்டமைப்பு வசதிகளின் மேலுள்ள சுமையைக் குறைக்கவும் உதவும்.நாடும் பொருளாதார ரீதியில் உயர்வு பெறும். சிந்திப்பார்களா அரசியல்வாதிகள்?
-கே.எஸ்.ராமகிருஷ்ணன் –
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அலுவலர்