தினகரன் 21.05.2010
உரிய பராமரிப்பின்றி பொழிவிழக்கும் நகராட்சி பூங்கா
தேனி, மே 21: அல்லிநகரம் நகராட்சி பூங்கா உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.
தேனி நகராட்சியில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே பொழுது போக்கு பூங்கா உள்ளது. இதனை பராமரிக்கும் பொறுப்பு ஆண்கள் சுயஉதவிக்குழுவிடம் இருந்தது. தற்போது, பூங்கா பராமரிப்பு பணி யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் பூங்கா பொலிவிழந்து காட்சியளிக்கிறது.
சிறுவர் விளையாடுவதற்கான ராட்டினம், சறுக்கு மேடை சிதிலமடைந்துள்ளன. மின்விளக்குகள் சேதமடைந்துள்ளன. பூச்செடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இங்கு குப்பைகள் நிறைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த முருகன் கூறுகையில், “பூங்காவிற்கு என தனியாக காவலாளி இல்லை. இதனால் சமூக விரோதிகள் புகுந்து பூங்காவை சேதப்படுத்துகின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இப்பூங்காவை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என்றார்.