உலக சிறுநீரக தினம்: மாநகராட்சி சார்பில் இன்று இலவசப் பரிசோதனை
உலக சிறுநீரக தினத்தையொட்டி இலவச சிறுநீரக பரிசோதனை முகாம்களை சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை நடத்துகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.
மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சிறுநீரக பரிசோதனையில் 1,709 மாணவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் உலக சிறுநீரக தினத்தில் (மார்ச் 13) நுங்கம்பாக்கம், பெரம்பூரில் ரத்தம், சிறுநீர் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் காலில் வீக்கம் உள்ளவர்கள் இந்த பரிசோதனைகளை செய்து, நோயின் தொடக்கத்திலேயே சிகிச்சை பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.