தினமணி 13.04.2010
உள்ளாட்சிகளில் குடிநீர்ப் பிரச்னை விஸ்வரூபம் தொடரும் மின்வெட்டே காரணம்
பொள்ளாச்சி, ஏப். 12: மின்தடை நேரம் அதிகரித்துள்ளதால், உள்ளாட்சிகளில் குடிநீர்ப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
÷ஆழியாறு அணையில் இருந்து குடிமங்கலம் கூட்டுóக் குடிநீர்த் திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, குடிமங்கலம் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 292 கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதேபோல, குறிச்சி, குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம், மயிலாடும்பாறை கூட்டுக் குடிநீர்த் திட்டம், பொள்ளாச்சி நகராட்சியின் 2 கூட்டுóக் குடிநீர்த் திட்டங்கள் என மொத்தம் 6 திட்டங்களுக்கு ஆழியாறிலிருந்து தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது.
÷இதில் அனைத்துத் திட்டங்களுக்குமே, ஆற்றில் அமைக்கப்பட்ட நீரேற்று நிலையத்துக்கு பிரத்யேகமாக மின்னிணைப்பு தரப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மின்தடையால் பெரிய பாதிப்பில்லை.
ஆனால் மொத்தம் 30 இடங்களில் அமைக்கப்பட்ட நீருந்து நிலையங்களில் மின்தடையால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
÷நீரேற்று நிலையத்திலும், நீருந்து நிலையங்களிலும் வெவ்வேறு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், சில சமயங்களில் நீரேற்றத்தைத் தடை செய்ய வேண்டியுள்ளது.
இது போதாதென்று நீர் அழுத்தத்தால் குழாய் வெடிப்பு ஏற்படுகிறது.
÷அந்தச் சமயத்தில் குடிநீர்க் குழாயைப் போர்க்கால அடிப்படையில் மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இரவு பகலாக வேலை நடப்பதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
÷குடிநீர்த் திóட்டப் பணிகள் துவங்கிய காலத்தில் இருந்ததை விட இப்போது சுமார் 3 மடங்கு மக்கள்தொகை உயர்ந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மின்தடை இருப்பதால் போதுமான அளவு குடிநீர் வழங்க முடியவில்லை. பல இடங்களில் 4 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
÷இது தொடர்பாக பொள்ளாச்சி எம்.எல்.ஏ. வி.ஜெயராமன் கூறுகையில், நீரேற்று நிலையங்களுக்கும் நீருந்து நிலையங்களுக்கும் ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும் என்பதற்காக 2 திட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார்.