தினமணி 2.11.2009
உள்ளாட்சி தின விழா: திருப்பூர் மாநகராட்சியில் கொண்டாட்டம்
திருப்பூர், நவ. 1: திருப்பூர் மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாநகராட்சியிலிருந்து நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வரை பேரணி நடத்தப்பட்டது.
மேயர் க.செல்வராஜ் தலைமையில் நடந்த இப்பேரணியில் துணை மேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், மாநகர் நல அதிகாரி ஜவஹர்லால் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நஞ்சப்பா பள்ளியில் மாநகராட்சி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு, பாடுப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாநகராட்சி பணியாளர்களுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் இசை நாற்காலி, கயிறு இழுத்தல், சட்டி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.
மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிசுகள் வழங்கினார். மேயர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது.