தினமலர் 06.05.2010
‘உவ்வே’ ஓட்டல்களை களையெடுக்குமா சுகாதாரத்துறை?
திருப்பூர் : திருப்பூரில் உள்ள பல ஓட்டல்கள் சுகாதாரமின்றி செயல்படுகின்றன; மாநகராட்சி சுகாதாரத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
மதுரையில் நேற்று முன்தினம் சுகாதாரமற்ற ஒரு ஓட்டலில், பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு ‘சீல்‘ வைத்து நடவடிக்கை எடுத்தனர். திருப்பூரில் பல ஓட்டல்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன. உணவு சமைக்கப்படும் சமையல் அறைகளில், எவ்வித சுகாதாரமான முறைகளும் பின்பற்றபடுவது இல்லை.
சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ வகைகள், சுகாதாரமாக பாதுகாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுவது இல்லை. ஈக்கள், கொசுக்கள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள் மொய்க்கும் பகுதிகளில், உணவு வகைகள் திறந்தவெளியில் வைத்து, பரிமாறப்படுகின்றன.
பலகாரங்களில், நிறத்துக்காக, உடல் நலத்துக்கு கேடான ரசாயனப்பொடி வகைகள் கலக்கப்படுகின்றன. போலி டீத்தூள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. உணவுக்காக பயன்படுத்தப்படும் பல பொருட்களை, குறைந்த விலையில் மலிவாக பெறுவதால், தரமில்லாத பொருட்களை கொண்டே பல ஓட்டல்களில் உணவு தயாரிக்கப்படுகிறது.
உரிமம் புதுப்பிக்கப்படாமலும், உரிமம் பெறாமலும் திருப்பூரில் பல உணவகங்கள் இயங்குகின்றன. புகார்கள் வரும்போது மட்டும், பெயரளவுக்கு சில ஓட்டல்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை ‘ரெய்டு‘ நடத்துகிறது; மற்ற நேரங்களில் ‘தூங்கி‘ வழிகிறது. நகரில் உள்ள சுகாதாரக்கேடுகளை தடுப்பதிலும், தவிர்ப்பதிலும் சுகாதாரத்துறை தரப்பில் முனைப்பான நடவடிக்கை எதுவும் இல்லை.
இனியாவது மாநகராட்சி சுகாதாரத்துறை அக்கறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டல்களில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். உணவு பொருட்கள் மற்றும் உணவு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து, சுகாதாரமற்ற முறையில் இயங்கும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.