தினமலர் 12.05.2010 உஷார்: அழுகிய ஆப்பிளில் அட்டகாசமான ஜூஸ்; அதிகாரிகள் ரெய்டில் அம்பலம்; பறிமுதல் கோவை: கோவை நகரில் மாநகராட்சி நகர்நல அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஜூஸ் தயாரிக்க அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ‘காலாவதியான மற்றும் கலப்பட உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது’ என, கோவை மாநகராட்சி நகர்நலத்துறை எச்சரித்துள்ளது. இதை மீறி, நகரிலுள்ள பெரும்பாலான கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விபரங்கள் இல்லாமலும் பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. விற்பனை செய்யப்படும் பேக்கிங் பொருட்களின் மீது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, நிகர எடை, விலை விபரம், தயாரிப்பு பொருளில் கலக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் உள்ளிட்டவை ‘தமிழ்நாடு பொட்டல பொருட்கள் சட்டம்- 1977’ன்படி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விபரங்கள் இல்லாமலே எண்ணற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. ‘குடிசைத் தொழில்’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் மிக்ஸர், முறுக்கு, காரக்கடலை, ஊறுகாய், இட்லி மாவு, ரவை பாக்கெட்கள் மீது மேற்கண்ட விபரங்கள் அச்சிடப்படுவதில்லை. இது போன்ற தயாரிப்புகள், கோவை நகரிலுள்ள செல்வபுரம், சொக்கம்புதூர், காந்திபார்க் பகுதிகளில் குடிசைத்தொழிலாக மேற்கொள்ளப்படுகின்றன. பாலிதீன் கவர்களில் பேக்கிங் செய்யப்படும் உணவுப்பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் சப்ளையர்கள் மூலமாக சைக்கிள், பைக்குகளில் எடுத்துச் செல்லப்பட்டு கடைகளுக்கு விற்கப்படுகின்றன. இவை, விற்கப்படாமல் மாதக்கணக்கில் கிடப்பில் இருந்தாலும், பலரும் வாங்கிச் செல்கின்றனர். கெட்டுப்போய் எண்ணெய் வாடை வீசினாலும், வேண்டா வெறுப்பாக உட்கொண்டு விடுகின்றனர். இதனால், வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன. இது போன்ற தின்பண்டங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையை முறைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் ரெய்டு: பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியிலுள்ள இரு பேக்கரிகளில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். காலாவதியான பிஸ்கட், சிப்ஸ் பாக்கெட்டுகள், ஜூஸ் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த அழுகிய ஆப் பிள் உள்ளிட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா கூறுகையில், ”உணவுப்பொருளில் கலப்படம் செய்யாமல், வியாபாரிகள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். உணவுப்பொருளை பேக்கிங் செய்யும் போது தயாரிப்பு தேதி, எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்ற விபரங்களையும் குறிப்பிட வேண்டும். ”இது குறித்து, வியாபாரிகள் மற்றும் குடிசைத்தொழில் செய்வோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்; மீறினால், சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார்.