தினமலர் 31.12.2009
ஊட்டியில் சுற்றுலா திட்டங்களுக்கு முன்னுரிமை: ஸ்டாலின் உத்தரவு
ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணிக்கு ஊட்டி தமிழகம் வழியாக காந்தல் பகுதிக்கு வந்தபோது, அப்பகுதி மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி சார்பில் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதியாக, காந்தல் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் நிறைவு பெற்றுள்ளது. அந்த திட்டம் குறித்து ஊட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரனிடம் கேட்டறிந்தார்.
பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்ததை அறிந்து, எவ்வித அறிவிப்பும், விழாவும் இல்லாமல் உடனடியாக காந்தல் பகுதிக்கு வந்து திறப்பு விழா நடத்தினார் ஸ்டாலின். குடிசை மாற்று திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து ஆலோசனை நடத்தனார். காந்தல் குருசடி காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் 500க்கும் மேற்பட்ட புதிய வீடுகளை நேரடியாக ஆய்வு செய்தார். ஊட்டியில் அமைக்கப்பட வேண்டிய கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திட்டம் குறித்தும், அதற்காக தேர்வு செய்யப்பட்டு இடம் குறித்தும் நகர்மன்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுற்றுலா திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் அவர் ஆலோசனை வழங்கினார்