தினகரன் 25.08.2010
எட்டிமடையில் உயிரியல் பூங்கா மத்திய உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின் முடிவு
கோவை, ஆக 25: மதுக்கரை எட்டி மடை வன எல்லை அருகே கல்லாங்கொத்து கிராமத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிரமாண்டமான உயிரியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்படும்.
இதில் நீர் யானை, யானை, காட்டெருமை, சிங்கம், புலி, சிறுத் தை, கரடி, மான், செந்நாய், முத லை, நீர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் உட்பட 120க்கும் மேற் பட்ட வன உயிரினங்கள், பறவை களை ஜோடியுடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நீரூற்று, பூங்கா, நடைபாதை, மலர் தோட்டம் என பல்வேறு வசதிகள் செய்யப்படும். மத்திய மிருககாட்சி சாலை ஆணையம் சார்பில் உயிரினங்களை பல்வேறு மாநிலங்களில் பூங்கா, சரணாலயங்களில் இருந்து பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கல்லாங்கொத்து கிராமத்தில் 69.70 ஏக்கர் நிலத்தை மாவட்ட வருவாய்த்துறையிடமிருந்து பெற கோரிக்கை விடப்பட்டது. வருவாய்த்துறையினர் இந்த இடத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க சம் மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், கூடுதலாக அப்பகுதியில் தனியாரிடமிருந்து 14.2 ஏக்கர் நிலத்தை பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் 50 மீட்டர் தூர எல்லைக்குள் கேரள மாநிலத்திற்கான பிரதான ரயில் பாதை அமைந்திருக்கிறது. முட்புதர், கரும்பாறை அடர்ந்த இப்பகுதியில் நீர்வளம் குறைவு.
மரம், செடிகளை நட்டால் அது செழிப்பாக வளருமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. சில ஏக்கர் நிலம் தரிசாக காணப்படுகிறது. இங்கே நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரியல் பூங்கா அமைவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ” இந்த இடத்தில் உயிரியல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் பெறுவது குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து முடிவு எடுக்கப்படும். ரயில்பாதையால் பூங்காவிற்கு இடையூறு இருக்காது. மரம், செடி நன்றாக வளரும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி முடிவு எடுப்பார்கள். வருவாய்த்துறையினர் விரைவில் இடத்தை ஒப்படைப்பார்கள், ” என்றார்.