தினமலர் 31.12.2009
எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகள் தீர்மானம்
கரூர்: கரூர் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தான இரண்டு தீர்மானங்களும் கரூர் நகராட்சி கூட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கனகராஜ், கமிஷனர்(பொ)ராஜா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், முதல் தீர்மானமாக மறைந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் வாசுகி மற்றும் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. இரங்கல் தீர்மானம் முடிந்த பிறகு அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மன்றத்தில் நுழைந்தனர்.
பின்னர் 19வது தீர்மானமாக கரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சி.எஸ்.ஐ., ஆண் மற்றும் பெண்கள் பள்ளிக்கு 2.29 லட்சம் மதிப்பில் 17 கம்ப்யூட்டர் வழங்க மன்றத்தில் பொருள் வைக்கப்பட்டது. “தனியார் பள்ளிக்கு, நகராட்சியில் இருந்து எந்த நலத்திட்ட உதவியும் அளிக்க முடியாது‘ என்று கூறி, தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து 20வது தீர்மானத்தில் கரூர் எம்.பி., உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருமாநிலையூரில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுசுகாதார வளாகம், உழவர் சந்தை அருகில் பயணிகள் நிழற்குடை உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு பணிகள் அறிவிக்கப்பட்டன.
கவுன்சிலர் பிரபு(தி.மு.க.,) இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “அனுமதிக்கப்பட்டுள்ள தொகையில் சுகாதார வளாகத்துக்கு சுவர் கூட கட்டமுடியாது. கூடுதல் தொகை ஒதுக்கினால்தான் சுகாதார வளாகத்துக்கு அனுமதிக்க முடியும்‘ என்றார்.
மேலும், “உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளதால் இங்கு இடையூறாக நிழற்குடை தேவையில்லை‘ என்று தலைவர் சிவகாமசுந்தரி கூறினார். இதற்கு கவுன்சிலர் முத்துசாமி(அ.தி.மு.க.,) எதிர்ப்பு தெரிவித்தார்.
முடிவில், 19 மற்றும் 20வது தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டு மற்றவை நிறைவேற்றப் பட்டன. இறுதியாக, திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கவுன்சிலர் கதிரவன்(தி.மு.க.,) தீர்மானம் கொண்டுவந்தார்.
இதைக்கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முத்துசாமி, நெடுஞ்செழியன், பரமசிவம், வளர்மதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். மொத்தத்தில் 45 நிமிடத்தில் கூட்டம் முடிந்தது.