தினமணி 31.08.2010
எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியைப் புறக்கணித்த நகராட்சிகரூர், ஆக. 30: கரூர் நகர்மன்றக் கூட்டத்தில், மக்களவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதி சம்பந்தமான தீர்மானங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கரூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் பெத்தாட்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் ஜி.ஆர். உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாத விவரம்:
மாரப்பன்: நகராட்சியில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை குறைக்க வலியுறுத்தி வழங்கப்பட்ட மனுக்கள் மீது ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்து வருகிறார்.
ஆணையர்: முறையாக வந்த மனுக்களுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும். உறுப்பினர் குறிப்பிட்ட மனு முறையாக வரவில்லை.
இதுகுறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆணையர்: விதிக்கப்பட்டுள்ள வரி அதிகமாக தோன்றினால் எதில் குறைபாடு உள்ளதோ அதைச் சுட்டிக்காட்டி மனு வழங்கப்பட வேண்டும். ஆனால், எதையும் குறிப்பிடாமல் வழங்கப்படும் மனு முறையற்ற மனுவாகும்.
ஆண்டாள் பாலகுரு, என். மணிராஜ்: வரி குறைப்பு தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு கமிட்டிக் கூட்டம் ஏன் கூட்டப்படவில்லை?
வே. கதிரவன்: லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமையவுள்ள பாலத்தின் அகலத்தை குறைக்க கூடாது.
இந்த சாதாரணக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நகராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடிபைப், ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி செய்துக் கொடுப்பது, சிறுபாலம் அமைப்பது, மழைநீர் வடிகால், சாலையோர பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 28 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மதிப்பு |ரூ.25 லட்சமாகும்.
இதில் 18, 28 வார்டுகளில் ஆழ்குழாய் கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி, குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காக மக்களவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து |ரூ 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல, உழவர் சந்தை, ராமானூர், திருமாநிலையூரில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்க என மொத்தம் | ரூ7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இதற்கு அனுமதி அளிக்குமாறும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானங்கள் மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ| 43.75 லட்சம்.
மேலும், கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ| 25 லட்சத்தில் கணினி அறிவியல் ஆய்வகம், |ரூ 9.90 லட்சத்தில் 30 மடிக் கணினிகள், புதியதாக கட்டப்படவுள்ள கட்டடத்தில் ரூ| 2.25 லட்சத்தில் மின் வசதிகள் செய்துக் கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.2010-11-ம் ஆண்டு சிறப்புச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சியில் சாலைகள், மழைநீர் வடிகால்களை புதுப்பிக்க 36 வார்டுகளுக்கும்ரூ |471.70 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இரா. பிரபு, இ. முத்துசாமி, க. சுப்பன், விஜயலட்சுமி, எஸ். கமலா, எஸ். பரமேஸ்வரி, க. நல்லமுத்து, சீனிவசான், ராஜலிங்கம், பி. பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.