தினமணி 05.05.2010
எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு கூடுதல் மண்ணெண்ணெய்: ஆட்சியர்
பெரம்பலூர், மே 4: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள எரிவாயு இணைப்பு இல்லாத புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, இந்த மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு பெறப்பட்ட புதிய, விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு எரிவாயு இணைப்பு இல்லாமல் இருந்தால் மாதம் ஒன்றுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இந்த மாதத்துக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், லெப்பைகுடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு மேற்கொண்டு, 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதம் மட்டும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும். இம் மாதத்தில் ஏற்கெனவே 3 லிட்டர் மண்ணெண்ணெய் பெற்றிருந்தால், அந்தக் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 2 லிட்டர் மண்ணெண்ணெயை, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.