தினமணி 18.08.2010
எரிவாயு தகனமேடை பராமரிப்புக்கு பொது மக்கள் நன்கொடை: நகராட்சி வேண்டுகோள்
கடலூர், ஆக. 17: கடலூரில் செயல்பட இருக்கும் எரிவாயு தகன மேடைகளைப் பராமரிக்க பொது மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என்று, கடலூர் நகராட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இதுகுறித்து கடலூர் நகராட்சி ஆணையர் த.குமார், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் நகராட்சியில் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை பகுதிகளில் இரு நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படும் இவற்றைப் பராமரிக்கும் பணி நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பராமரிப்புச் செலவுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவுரைப்படி, நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களிடம் நிதி திரட்டுவதற்காக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது.
வங்கியில் செலுத்தப்படும் நிதி வைப்பு நிதியாக, பொது மக்களின் பங்குத்தொகை என்ற பெயரில் பரோடா வங்கியின் கடலூர் கிளையில் பராமரிக்கப்படும். கணக்கு எண் 12220100013082. இந்த வைப்புத் தொகை நிரந்தரமாக இருக்க, அதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகை, எரிவாயு தகனமேடை பராமரிப்புக்குப் பயன்படுத்தப்படும். நல்ல உள்ளம் கொண்ட பொதுமக்கள் பங்குத் தொகையினை வங்கிக் கணக்கில் சேர்க்கலாம் என்று நகராட்சித் தலைவர் மற்றும் ஆணையர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்க, நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாசில்லா நகரை உருவாக்க இப்பணி அவசியம் ஆகிறது என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.