தினகரன் 02.11.2010
எலிகளை கொல்ல கூடுதல் ஊழியர்கள் நியமனம்
மும்பை, நவ.2: எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, புறநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் எலிகளை கொல்வதற்காக 183 ஊழியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தற்போது மும்பை நகர பகுதியில் எலிகளை கொல்ல 44 ஊழியர்கள் உள்ளனர். இதை புறநகர் பகுதிக்கும் விரிவு படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. புறநகர் பகுதிகளுக்காக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக மாநகராட்சியின் பூச்சிகள் அழிப்பு இலாகா சமர்ப்பித்த திட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் சுவாதீன் ஷத்திரியா ஒப்புதல் அளித்து இருக்கிறார். நிலைக்குழுவின் அனுமதி கிடைத்ததும் புறநகர் பகுதியில் எலிகளை கொல்ல ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இரவு நேரத்தில் எலிகளை கொல்வதற்காக நியமிக்கப்படும் ஊழியர்கள் தினசரி குறைந்தது 30 எலிகளை கொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு நாளில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தால் அடுத்த நாள் இரவில் கூடுதல் எலிகளை கொன்று இதை சரி செய்துவிட வேண்டும். கொல்லப்பட்ட எலிகள் பரேலில் உள்ள ஹாஃப்கின் இன்ஸ்டிடியூட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கருவியில் வைத்து எரித்து சாம்பலாக்கப்படும்.
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை வருடத்துக்கு 10 சதவீதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் மும்பையில் உள்ள ‘ஏ’ வார்டில்தான் (மதன்புரா, நாக்பாடா, லேமிங்டன் ரோடு, தார்டுதேவ்) அதிகபட்சமாக கடந்த 2005ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையே மொத்தம் 1.86 லட்சம் எலிகள் கொல்லப்பட்டுள்ளன. ‘பி’ வார்டு (மஜீத், நல்பஜார்) இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதே காலகட்டத்தில் இந்த பகுதியில் 1.47 லட்சம் எலிகள் கொல்லப்பட்டன.
இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரையில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 509 எலிகள் கொல்லப்பட்டிருப்பதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.