எழுமலை பேரூராட்சியில் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை
உசிலம்பட்டி: எழுமலை பேரூராட்சியில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் கண்ணன் எச்சரித்துள்ளார்.
உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமும், மேக்கிழான்கிணறு மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பருவமழை பொய்த்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. கோடைகாலம் காலம் துவங்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் சுழற்சி அடிப்படையில் வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பேரூ ராட்சி செயல் அலுவலர் கண்ணன் கூறியதாவது:
பேரூராட்சி பகுதியில் சிலர் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவதாகவும், இதனால் கடைகோடி மேட்டு பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை என்றும் புகார் வந்துள்ளது. மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.