ஏரிக்கு நீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
ஜலகண்டாபுரம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் வளர்ந்து வரும் நகர் பகுதியாக உள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக பெரியஏரி விளங்குகிறது. 6.85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில் மழை காலங்களில் தண்ணீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் போர்வெல் மற்றும் கிணறுகளில் தண்ணீர் மட்டம் அதிகரிக்கும்.
பெரிய ஏரியை தூர் வாருவதற்கு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஏரியின் மட்டத்தில் இருந்து சுமார் 1 மீட்டர் வரை ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம், துணை ஆட்சியர் சந்தீப்நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, ‘ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீராதாரமாக விளங்கும் பெரிய ஏரியை ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர்வார வேண்டும். ஏரிக்கு நீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆட்சியர் மகரபூஷணம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.