தினகரன் 25.05.2010 ஏற்காடு கோடை விழா சுற்றுலா பயணிகள் வசதிக்காக முக்கிய இடங்களில் நடமாடும் கழிப்பறை வசதி சேலம், மே 25: ஏற்காடு கோடைவிழாவில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக முக்கிய இடங்களில் தற்காலிகமாக நடமாடும் கழிப்பறை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் கூறினார். ஏற்காடு கோடை விழா இம்மாதம் 28ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. கோடை விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் கூறியதாவது: ஏற்காடு 35வது கோடை விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத கோடை விழாவை கொண்டாடும் வகையில் ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்காடு கோடை விழாவுக்கு செல்பவர்களை அடிவாரத்திலேயே நிறுத்தி பிளாஸ்டிக் பை கொண்டு சென்றால் அதை பெற்று கொண்டு, அதற்கு மாற்றாக துணிப்பை அல்லது காகிதப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை என் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பர். ஏற்காடு கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விழா நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். அவர்களுக்கு வசதியாக கழிப்பிட வசதி இல்லாத இடங்களில் தற்காலிகமாக 5 கழிப்பறை கொண்ட ஒரு யூனிட் வீதம் 6 இடங்களில் தனியார் பங்களிப்புடன் நடமாடும் கழிப்பறை வசதி அமைக்கப்பட உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏற்காடு மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியில் சென்று, இறங்கும் போது குப்பனூர் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குப்பனூர் வழியிலான பாதை பாதுகாப்பானதா? என்பதை ஆய்வு செய்து கூறுமாறு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் சந்திரகுமார் கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலையரசி, மாநகராட்சி ஆணையர் பழனிசாமி, கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர்கள் குழந்தைவேலு, சுப்பிரமணியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஹரிகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) தயாளன், ஏற்காடு பிடிஓ., ஜெயச்சந்திரன், சுற்றுலா அலுவலர் சந்திரா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தகவல்