ஏல விவகாரம்: பஸ் நிலையங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நகராட்சி
நாகர்கோவிலில் உள்ள இரு பஸ் நிலையங்களிலும் பஸ்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்து பொதுஏலத்தில் முடிவு ஏற்படாததால், நகராட்சி ஊழியர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பஸ் நிலையம், நாகர்கோவிலில் உள்ள அண்ணா பஸ் நிலையம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இந்த இரு பஸ் நிலையங்களுக்கு வந்து செல்லும் பஸ்களுக்கு நாள்தோறும் நுழைவுக் கட்டணமாக ரூ. 12 வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இக்கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ. 21 லட்சத்து 6 ஆயிரத்து 988-க்கு ஏலம் போனது.
நிகழாண்டு ஏலம் எடுப்பவர்கள், ஏலம் எடுக்கும் தொகைக்கு 12 சதவீதத்துக்கு மேல் சேவை வரி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் ஒப்பந்தப்புள்ளியை யாரும் கோரவில்லை எனத் தெரிகிறது. எனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பஸ் நிலையங்களுக்கு வரும் பஸ்களுக்கான நுழைவுக் கட்டணம் நகராட்சி ஊழியர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மறு ஏலம் விடப்பட்டு முடிவு ஏற்படும் வரை ஊழியர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.