தினபூமி 29.05.2013
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்
சென்னை, மே.29 – தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம்
மக்கள் பயன்பெறும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர்
ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று
(புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் இரு மாவட்ட மக்களின் நீண்டகால
கனவு நனவாகிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டும் வறட்சி பாதித்த மாவட்டங்கள்
ஆகும். இங்குள்ள நிலத்தடி நீரில் புளோரைடு உப்பின் அளவு 1.5 மில்லி கிராம்
முதல் 12.4 மில்லி கிராம் வரை உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும்
அதிகம். வேறு வழியில்லாமல் இந்த நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் பற்கள்
மஞ்சள் நிறமாக மாறுதல், மூட்டு தேய்மானம், முதுகெலும்பு, கை, கால் வளைதல்,
முடக்குவாதம் போன்ற பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இந்த நோய்களைக்
கட்டுப்படுத்தவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
தொடங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2001-2006-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில்
இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஜப்பான் நாட்டு நிதி
உதவியோடு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது 3-வது முறையாக ஆட்சிப்
பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்
திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர
வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து இந்த திட்டப் பணிகளை
அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து திட்டப் பணிகளை
முடுக்கிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இப்போது
ரூ.1,928 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டமும்
நடத்தப்பட்டது. காவிரி ஆற்றில் இருந்து ஏறத்தாழ 1,150 மீட்டர் உயரத்திற்கு
அதாவது 1.25 கிலோ மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை பம்பிங் செய்து தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு
செல்லப்படுகிறது. மொத்தம் 9 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் தூரத்திற்கு
குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்கள்
பயன்பெறும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா
இன்று (புதன்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம்
தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே
நடைபெறும் விழாவில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதன்
மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது
இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த
7,679 ஊரகக் குடியிருப்புகளில் 50 சதவீத குடியிருப்புகளுக்கும், 16
பேரூராட்சிகளுக்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 3
நகராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இந்த திட்டம்
பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின்
நீண்டகால கனவு நனவாகிறது. இரு மாவட்ட மக்களும் இப்போதிருந்தே மகிழ்ச்சியில்
திளைக்கின்றனர்.