தினமலர் 28.06.2010
ஒப்பந்தக்காரர்களுக்கான ஆய்வு கூட்டம்
விளாத்திகுளம் : விளாத்திகுளம் யூனியனில் நடந்த ஒப்பந்தக்காரர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வலியுறுத்தி பேசினார்.விளாத்திகுளம் யூனியனில் நிலுவை மற்றும் நடப்பு ஆண்டு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒப்பந்தக்காரர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அனைத்து ஒப்பந்தக்காரர்களும் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரகாஷ் பேசியதாவது,விளாத்திகுளம் யூனியனில் உள்ள நிலுவைப் பணிகளை ஜூலை 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2010-11ம் ஆண்டுக்கான அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் ஊரக உட்கட்டமைப்பு பணிகள், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதி உட்பட அனைத்து திட்டப் பணிகளையும் உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் பிரகாஷ் பேசினார். ஆய்வுக்கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் ஷாலினி, யூனியன் கமிஷனர் சுப்பிரமணியன், பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர்.